தேவயானி மகள் என்பதால்தான் இவ்வளவு கொண்டாடுகிறார்களா?.. ராஜகுமாரன் சொல்வது என்ன?
சென்னை: நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் இரண்டாவது மகளான இனியா தனியார் சேனல் நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு பிரபலமடைந்தார். சமீபத்தில் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பும் அவரை தேடி சென்றிருப்பதாக ஒரு தகவல் ஓடுகிறது. இந்நிலையில் மகள் பற்றி ராஜகுமாரன் பேசிய விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
தொட்டாச்சிணுங்கி படத்தில் நடித்து ஹீரோயினாக தமிழில் அறிமுகமான தேவயானிக்கு காதல் கோட்டை திரைப்படம் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அகத்தியன் இயக்கியிருந்த அந்தப் படம் பெற்ற மெகா வெற்றிக்கு பிறகு தேவயானிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. அப்படி அவர் நடித்த சூர்யவம்சம், நினைத்தேன் வந்தாய், பாட்டாளி, ப்ரெண்ட்ஸ் என வரிசையாக படங்கள் ஹிட்டடித்தன. இதன் காரணமாக டாப் 10 நடிகைகளில் ஒருவராக மாறினார்.
நோ கிளாமர்: தேவயானி நடித்த ஒரு படத்தில்கூட ஓவர் கிளாமர் அவர் காட்டியதில்லை. சினிமா துறையில் ஹீரோயினாக வெல்ல வேண்டுமென்றாலோ அல்லது நிலைக்க வேண்டுமென்றாலோ கிளாமர் காட்ட வேண்டும் என்ற நிலைமையை உடைத்த நடிகைகளில் தேவயானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கிளாமர் ரோல்களை மறுத்ததன் காரணமாகவே அவரை ரசிப்பதற்கு ஒரு கூட்டம் உருவானதும் கவனிக்கத்தக்கது.

ராஜகுமாரனுடன் திருமணம்: விஜய், அஜித், கமல் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து டாப் கியரில் சென்றுகொண்டிருந்த தேவயானி; நீ வருவாய் என படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்தார். அந்தக் காதலுக்கு அவரது வீட்டில் சம்மதம் கிடைக்காததை அடுத்து வீட்டை விட்டு வெளியே வந்து காதலரை கரம் பிடித்தார். தேவயானி - ராஜகுமாரன் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார் அவர். கடைசியாக 3 BHK படத்தில் நடித்திருந்தார்.
ஃபேமஸான இனியா: தேவயானியின் இரண்டு மகள்களில் இரண்டாவது மகள் இனியா தனியார் சேனல் நடத்திய ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு புகழடைந்தார். அவர் அந்த ஷோவில் பாடிய விதத்தை இசையமைப்பாளர் தேவா உள்ளிட்டோர் எல்லாம் பாராட்டினார்கள். சமீபத்தில்கூட தனியார் ஊடகம் சார்பில் இனியாவுக்கு விருது ஒன்றும் வழங்கப்பட்டது. மேலும் சினிமாவில் அவரை கதாநாயகியாக நடிக்க வைக்க சிலர் அணுகியதாகவும்; இதுவரை அதுதொடர்பாக தேவயானியோ, ராஜகுமாரனோ முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் இனியா விருது வாங்கிய விழாவில் பேசிய ராஜகுமாரன், "தேவயானியின் குழந்தை என்பதால்தான் இனியாவை தூக்கி கொண்டாடுகிறீர்கள் என்றெல்லாம் கமெண்ட்ஸ் வரும். உண்மையில் தேவயானியின் குழந்தை என்பதால்தான் இனியா இவ்வளவு படித்திருக்கிறார். எல்லோராலும் அதை செய்ய முடியாது. ரொம்ப கஷ்டம். லட்சத்தில் ஒரு குழந்தையைத்தான் இப்படி வளர்க்க முடியும். ஸ்டார் குழந்தை என்பதால் அதிக எஃபர்ட் போட்டு பல விஷயங்களை செய்திருக்கிறார். அதற்கான பலன்தான் இனியாவுக்கு கிடைக்கிற அனைத்து பாராட்டுக்களும். தேவயானிக்குத்தான் முழு மார்க்கையும் கொடுக்க வேண்டும்" என்றார்.


Click it and Unblock the Notifications











