என் மகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்களேன்..மகளுக்காக தேவயானி இப்படி இறங்கிட்டாரே..என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: கோலிவுட்டில் ஃபேமஸான நடிகைகளில் ஒருவர் தேவயானி. இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் இளைய மகளான இனியா சிறப்பாக பாடல்கள் பாடக்கூடியவர். ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்த அவர்; விரைவில் திரைத்துறையிலும் பெரிய பின்னணி பாடகியாக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகை தேவயானி தனது மகளுக்காக வாய்ப்பு கேட்ட வீடியோ ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அகத்தியன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த காதல் கோட்டை திரைப்படம் தேவயானிக்கு பெரிய அடையாளத்தை பெற்றுக்கொடுத்தது. அந்தப் படம் வந்த சமயத்தில் எல்லோரும் கமலியை (தேவயானி ஏற்றிருந்த கதாபாத்திரம்) கொண்டாடி தீர்த்தார்கள். அப்படத்துக்கு பிறகு அவர் நடித்த பாட்டாளி, சூர்யவம்சம் நினைத்தேன் வந்தாய், ப்ரெண்ட்ஸ் என பல படங்கள் வெற்றி பெற்று அவருக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கியது.
கிளாமர் காண்பிக்காத ஹீரோயின்கள்: தமிழ் சினிமாவில் கிளாமர் காண்பிக்காமல் வெற்றி பெற்ற ஹீரோயின்களில் தேவயானியும் ஒருவர். நதியா, சித்தாரா வரிசையில் அவர் அந்தப் பெயரை எடுத்தார்.அதற்காகவே அவரை ஒருதரப்பினர் ரசித்தார்கள். தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் நடித்தபோதும் கிளாமருக்கு நோ என்ற கொள்கையில் தீவிரமாகவே இருந்தார். இருந்ததோடு மட்டுமின்றி அந்த மொழிகளிலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்ப்பை மீறி திருமணம்: தேவயானி பீக்கில் இருந்தபோது ராஜகுமாரன் இயக்கத்தில் நீ வருவாய் என படத்திலும் விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்திலும் நடித்தார். அந்த சமயத்தில் இரண்டு பேருக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் தேவயானி வீட்டில் இந்தக் காதலுக்கு சம்மதம் கிடைக்கவில்லை. இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து எதிர்ப்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்துகொண்டார். பீக்கில் இருந்த தேவயானி இரண்டே படங்கள் இயக்கிய ராஜகுமாரனை திருமணம் செய்திருந்தது அந்த சமயத்தில் பெரிய ஆச்சரியத்தை உண்டு செய்தது.
இனியாவின் பாடும் திறமை: தேவயானி - ராஜகுமாரன் தம்பதிக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் இளைய மகள் இனியா தனியார் சேனலில் பங்கேற்ற பாடல் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பாக பாடினார். அவரால் அந்தப் போட்டியில் டைட்டிலை வெல்ல முடியாவிட்டாலும் பலரது மனங்களை வென்றுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தேனிசை தென்றல் தேவா உள்ளிட்டோர் எல்லாம் இனியாவின் குரல் வளத்தை வெகுவாக பாராட்டினார்கள். விரைவில் திரைத்துறையிலும் பிஸியான பாடகியாக வருவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.
வாய்ப்பு கேட்ட தேவயானி: இந்நிலையில் தனது மகளுக்கு தேவயானி மேடையில் வைத்து இசையமைப்பாளர் சாய் அபயங்கரிடம் வாய்ப்பு கேட்டார். சமீபத்தில் சாய்க்கு தேவயானி ஒரு நிகழ்ச்சியில் விருது வழங்கினார். அப்போது பேசிய அவர், "முன்பு சாய் அபயங்கரின் அப்பா, அம்மாவுக்கு ரசிகர்களாக இருந்தோம். இப்போது சாய் அபயங்கருக்கு ரசிகர்களாக இருக்கிறோம். நீங்கள் மென்மேலும் வளர வேண்டும். எனது மகளும் நன்றாக பாடுவார்.
எனது மகள் இனியா உங்களின் தீவிரமான ரசிகை. அவங்களுக்கு உங்கள் இசையில் பாடல் பாட வேண்டும் என்பது ஆசை. வாய்ப்பு இருந்தால் அழைத்து கொடுங்கள்" என்றார். அதற்கு சாய், 'கண்டிப்பாக மேடம்' என்றார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், தேவயானி எவ்வளவு பெரிய நடிகை. மகளுக்காக இப்படி ஓபன் ஸ்டேஜில் எந்த ஈகோவும் இல்லாமல் வாய்ப்பு கேட்கிறாரே என்று ஆச்சரியத்துடன் அதனை பகிர்ந்து ட்ரெண்டாக்கிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











