ஆட்சியமைக்க வேண்டுமா?.. திமுக உதவியை எடுத்துக்கோங்க விஜய் அண்ணா.. விஜயலட்சுமி அட்வைஸ்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேதற்கு நெருங்கி வந்துவிட்டார். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை தெரிவித்திருக்கின்றன. விசிகவும் விரைவில் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிகிறது. தங்களது கனவு நிறைவேறுவதற்கு இன்னும் சில படிகளே இருப்பதால் அவற்றை நல்லபடியாக கடக்க வேண்டுமே என்ற பதற்றத்திலும் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி பேசியிருக்கும் விஷயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
எம்ஜிஆருக்கு பிறகு தமிழ்நாட்டு அரசியலில் ஒரு நடிகராக விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இருபெரும் திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவை இரண்டாவது இடத்துக்கு தள்ளிவிட்டது தவெக. வாக்கு சதவீதம் மட்டுமே 30க்கும் மேல். மொத்தம் 108 இடங்களில் வென்றிருக்கிறது. மற்ற கட்சிகளைவிடவும் தவெகதான் அதிக தொகுதிகளை வென்றிருக்கிறது. எனவே அக்கட்சிக்கு ஆட்சியமைக்க உரிமையுண்டு. ஆனால் சட்டப்பேரவையில் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவை காட்ட வேண்டும். அப்போதுதான் ஆட்சி நீடிக்கும் என்ற நிலை இருந்தது.

ஆளுநரின் முட்டுக்கட்டை: ஆனால் ஆளுநரோ சட்டப்பேரவையில் காண்பிப்பதற்கு முன்னதாகவே ஆதரவை காட்ட வேண்டும் என டிமாண்ட் வைத்திருக்கிறார். கடந்த சில நாட்களாகவே மற்ற கட்சிகளின் ஆதரவை எதிர்நோக்கி இருக்க ஆரம்பித்தார். இதற்காக பல கட்சிகளிடம் சென்று ஆதரவு கேட்கும் வேலைகளில் தவெக இறங்கியது. அதன் பலனாக காங்கிரஸ் (5), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2) கட்சிகள் ஆதரவை கொடுத்திருக்கின்றன. விரைவில் விசிகவும் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
ஸ்டாலின் கோரிக்கை: இவ்வளவு இழுத்தடிப்புக்கும் காரணம் திமுகதான் என்று தவெகவினர் வழக்கம்போல் பேச தொடங்கிவிட்டார்கள். ஆனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினோ தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் ஆளுநருக்கு கோரிக்கை ஒன்றையும் வைத்திருக்கிறார். அதில், "ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி! இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ஆட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
விஜயலட்சுமி பேட்டி: இந்நிலையில் பிரபல நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில், "விஜய் அண்ணா உங்களுக்கு அறிவுரை சொல்கிறேன் என நினைக்காதீர்கள். ஆட்சியமைக்க திமுக உதவி வேண்டுமென்றல் அதை எடுத்துக்கொள்ளுங்கள். அதிமுக உதவி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கல் ஆட்சியமைக்க திமுக இடையூறு தராது என்று ஸ்டாலின் சார் சொல்லிவிட்டார். உங்களுக்கு தமிழ்நாட்டில் யாரும் எதிரி இல்லை அண்ணா. நீங்கள் நன்றாக வர வேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். நீங்கள் முதலமைச்சராக வேண்டும் என்று எல்லோரும் காத்திருக்கிறோம். அனைவரும் ஒரே குடும்பம். மக்கள் பாவம். நீங்கள் தோற்று போய்விடாதீர்கள் விஜய் அண்ணா" என்று உருகியிருக்கிறார்.
விஜயலட்சுமி சொன்னதுபோல் ஒருவேளை திமுகவின் ஆதரவை கேட்கும் நிலைமைக்கு கூட விஜய் செல்லலாம். அப்போது எந்த தயக்கமுமின்றி அவர் அந்த ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்துக்கள்கூட இப்போது அதிகம் எழுந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அப்படி அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது எல்லோரது கருத்தும்.


Click it and Unblock the Notifications
