லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்.. அஜித், கமல் பாணியில் நயன்தாரா.. ரசிகர்கள் ஏமாற்றம்!
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இருக்கும் புனைபெயர்களை போன்று நடிகைகளுக்கு பெரிய அளவில் இருந்தது இல்லை. திறமையுள்ள நடிகைகள் சினிமாவில் ஜொலித்தாலும், ரசிகர்களின் பேரன்பை பெற்றாலும் பெரிதளவில் ஈர்க்கும் வகையிலான நடிகைகளுக்கு என்று தனி பெயர் இருந்தது கிடையாது. அந்த வரலாற்றை மாற்றி அமைத்தவர் நயன்தாரா. கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நயன்தாராவை ரசிகர்கள் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். தற்போது அந்த பட்டத்திற்கே பெரும் போட்டி நிலவுகிறது.
பட்டங்கள்: தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளுக்கு புனைவு பெயர் வைப்பது அவர்களுக்கு பட்டங்கள் வழங்குவதை போன்ற வெகுமதி. ரசிகர்கள் அன்பால் கிடைக்கும் பரிசாக பார்க்கின்றனர். இந்த பட்டம் மக்கள் தலைவன் எம்ஜிஆர் முதல் செவாலியே சிவாஜி, சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், தளபதி, அல்டிமேட் ஸ்டார், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வரை தொடர்கிறது. பரதநாட்டியத்தால் சினிமா ரசிகர்களை கட்டி போட்டவர் பத்மினி நாட்டிய பேரொளி என்ற பட்டத்தை பெற்றார். ஆனால், நடிகர்களை காட்டிலும், நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பட்டங்கள் குறைவு தான். எத்தனை நடிகைகள் வந்நாலும் கனவுக்கன்னி என்ற பெயரோடு முடிந்துவிடும்.

நயன்தாரா: ஹரி இயக்கத்தில் வெளியான ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நயன்தாரா அறிமுகம் ஆனார். 2வது படத்திலேயே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். பின்பு ஆதவன், பில்லா, ராஜா ராணி என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார். தனிப்பட்ட காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா 2வது முறையாக கம்பேக் கொடுத்து தனது மார்க்கெட்டை உயர வைத்தார். தடுக்கி விழுந்தாலும் எழுந்து நின்றார்.
லேடி சூப்பர் ஸ்டார்: ரசிகர்களால் செல்லமாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நயன்தாரா. தற்போது தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என அறிக்கை விடுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், "என் வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்துள்ளது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதை அழகு சேர்த்துள்ளது. என் வெற்றியின் போது என் தோளில் சாய்த்து பாராட்டியதோடு, கடினமான தருணங்களில் என்னைத் தூக்கி நிறுத்தவும் நீங்கள் எப்போதும் இருந்தீர்கள்.
வாழ்த்து: நீங்கள் பலரும் என்னை 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று அன்புடன் அழைத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளீர்கள். உங்கள் பேராதரவால் உருவான இந்தப் பட்டத்திற்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இனிமேல் என்னை நயன்தாரா என்று அழைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். என் பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று. அது என்னை மட்டும் குறிக்கிறது. ஒரு நடிகையாக மட்டுமல்ல, ஒரு தனிநபராகவும், பட்டங்களும் விருதுகளும் மதிப்பு மிக்கவைதான், ஆனால் சில சமயங்களில் அவை நம்மை நம் வேலையிலிருந்து, நம் கலை தொழிலிலிருந்து, உங்கள் அன்பான தொடர்பிலிருந்து பிரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளார்.
பட்டங்கள் வேண்டாம்: முன்னதாக நடிகர் அஜித், கமல் ஆகியோர் தங்களது பெயர்களுக்கு முன்னால் புனைபெயர்களை வைத்து அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்டனர். எங்களது பெயர்களை அழைத்தால் போதும் என்றனர். தற்போது அந்த வரிசையில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











