அஜித் ஜோடி, பாலா படம்... அமர்க்களமாக செகண்ட் இன்னிங்சை தொடங்கிய ஈஸ்வரிராவ்!
விசுவாசம் படத்தில் ஈஸ்வரிராவ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: காலா படத்தைத் தொடர்ந்து, அஜித்தின் விசுவாசம் படம் மற்றும் பாலாவின் படமொன்றில் நடிக்கிறார் நடிகை ஈஸ்வரி ராவ்.
தமிழில் ராமன் அப்துல்லா, குருபார்வை, சிம்மராசி, விரும்புகிறேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஈஸ்வரிராவ். சிரிப்பில் கே.ஆர்.விஜயாவை ஞாபகப் படுத்திய இவர், திருமணத்திற்குப் பின் நடிப்பதற்கு ஓய்வு கொடுத்தார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா படத்தில் நடித்தார்.

பாராட்டு:
காலாவில் மேக்கப் இல்லாமல் ரஜினியின் மனைவியாக நடித்த ஈஸ்வரிராயின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவரைப் பற்றி ரஜினி பாடும் தங்கச்சிலை பாடல் பிரபலமானது.

பாலா படம்:
இதன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை வெற்றிகரமாகத் தொடங்கிய ஈஸ்வரிராவ், தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் `வர்மா' படத்தில், ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் தான் விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகம் ஆகிறார்.

முக்கியக் கதாபாத்திரம்:
பாலாவின் படமென்றாலே நடிகர்கள் தங்கள் கெட்டப்பை முற்றிலும் மாற்றி விடுவார்கள். அந்தவகையில் ஈஸ்வரிராவும் வர்மாவுக்காக புதிய கெட்டப்பில் வலம் வருகிறார். இப்படத்தில் இவரது கதாபாத்திரம் பேசும்படி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விசுவாசம்:
இந்நிலையில், விசுவாசம் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக ஈஸ்வரி ராவ் நடிக்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தில் அஜித் தந்தை, மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சம்மதம்:
இதில் மகனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் நிலையில், அப்பாவுக்கு ஜோடியாக நடிக்க ஈஸ்வரி ராவிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு ஈஸ்வரி ராவும் சம்மதம் தெரிவித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.

அடுத்த ரவுண்ட்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார் ஈஸ்வரி ராவ். ரஜினியைத் தொடர்ந்து, தல அஜித்துடனும் அவர் ஜோடி சேர இருப்பதால், தமிழ் சினிமாவில் ஈஸ்வரி ராவின் இரண்டாவது இன்னிங்ஸ் மிக வலுவாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறுது.


Click it and Unblock the Notifications











