Top 5 Actress 2023: கோலிவுட் குயின்கள்.. இந்த ஆண்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்த டாப் 5 ஹீரோயின்கள்!
சென்னை: 2023ம் ஆண்டு ஏகப்பட்ட பெரிய படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி வசூல் வேட்டை நடத்தி உள்ளது. நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் தங்களின் நடிப்புத் திறமையை இந்த ஆண்டு வெளிப்படுத்தி உள்ளனர்.
பொங்கலுக்கு வெளியான துணிவு படத்தில் மஞ்சு வாரியர், வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா என ஆரம்பத்திலேயே ரசிகர்களை நடிகைகள் இந்த ஆண்டு கவர ஆரம்பித்தனர்.
அதன் பின்னர் பொன்னியின் செல்வன் 2 படத்தில் குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஒவ்வொரு நடிகையும் ஸ்கோர் செய்தனர்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஹீரோயினாக நடிக்கவில்லை என்றாலும், காவாலா பாடல் மூலமே ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் ஆட்டம் போட வைத்திருந்தார் நடிகை தமன்னா. லியோ படத்தில் நடிகை த்ரிஷா செம பர்ஃபார்மன்ஸ் செய்து மாஸ் காட்டினார். ஷாருக்கானின் ஜவான் படத்தைத் தொடர்ந்து அன்னபூரணி படத்திலும் நயன்தாரா தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இவர்கள் மட்டுமின்றி குட் நைட் ஹீரோயின் மிதா ரகுநாத், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல நடிகைகள் தங்கள் நடிப்புத் திறமையையும் இந்த ஆண்டு வெளிப்படுத்தி உள்ளனர். இந்நிலையில், டாப் 5 இடங்களை இந்த ஆண்டு பிடித்திருக்கும் நடிகைகள் குறித்து இங்கே காணலாம்..
கீர்த்தி சுரேஷ் - மாமன்னன்: நடிகை கீர்த்தி சுரேஷ் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் ஏற்று நடித்த கதாபாத்திரமே பலரது கவனத்தை ஈர்த்தது. கடந்த ஆண்டு சாணிக் காயிதம் படத்தில் மிரட்டிய அளவுக்கு மிரட்டவில்லை என்றாலும், கொடுத்த கதாபாத்திரத்தை நச்சென செய்திருந்தார்.
அபர்ணா தாஸ் - டாடா: இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடித்திருந்தார். கவினும் அவரும் படத்தில் போட்டிப் போட்டு நடித்து முதல் ஃபிரேமில் இருந்து இறுதி ஃபிரேம் வரை ஸ்கோர் செய்தனர். பீஸ்ட் படத்தில் நடிக்க பெரிய வாய்ப்பு கிடைக்காத நிலையில், டாடா படத்தில் அதை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.
நயன்தாரா - அன்னபூரணி: ஷாருக்கானின் ஜவான் மற்றும் அன்னபூரணி என இந்த ஆண்டும் தனது ரசிகர்களை தான் தவிக்க விட மாட்டேன் என நடிகை நயன்தாரா தனது சிறப்பான நடிப்பால் சரியான தீனிப் போட்டுள்ளார்.
பவானிஸ்ரீ - விடுதலை: இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் சகோதரியான பவானிஸ்ரீ இந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடித்த விடுதலை படத்தில் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்திருந்தார். ஹீரோயினாக இருந்தாலும், கடைசியாக அந்த காவல் நிலையத்தில் நிர்வாண காட்சியில் மற்ற பெண்களை போல அவரும் நடித்திருந்தது பாராட்டுக்களை அள்ளியது.
த்ரிஷா - பொன்னியின் செல்வன், லியோ: இந்த பட்டியலில் இந்த ஆண்டு நம்பர் ஒன் இடம் என்றால் அது த்ரிஷாவுக்குத் தான். பொன்னியின் செல்வன் 2, விஜய்யுடன் லியோ, தி ரோடு என வெளுத்து வாங்கி உள்ளார். அடுத்த ஆண்டு விடாமுயற்சி, தக் லைஃப் படங்களிலும் த்ரிஷா மாஸ் காட்டுவார் என்றே தெரிகிறது.


Click it and Unblock the Notifications











