கல்யாணமே வேண்டாம்னு இருந்த ஐஸ்வர்யா லட்சுமி.. இப்போ அதுக்காக மனசை மாத்திக்கிட்டாங்களாம்
சென்னை: திருமணம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சினிமா பிரபலங்களைப் பொறுத்தவரை, அவர்கள் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக 30 வயதைக் கடந்த நடிகைகள் குறித்து சமூக வலைதளங்களில் அடிக்கடி திருமண வதந்திகளும் பரவி வருகின்றன. ஆனால், அவற்றுக்கு பெரும்பாலான நடிகைகள் மௌனமே பதிலாக அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் இருந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தற்போது தனது திருமணம் குறித்த மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படையாக பகிர்ந்திருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி, சினிமாவுக்கு வருவதற்கு முன்பு மருத்துவராக வேண்டும் என்ற கனவோடு மருத்துவம் படித்தவர். எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்ற அவர், கல்லூரி நாட்களில் பகுதி நேரமாக மாடலிங்கில் ஈடுபட்டார். அதுவே அவருக்கு சினிமா வாய்ப்பைத் தேடிக் கொடுத்தது.
2017-ம் ஆண்டு நிவின் பாலிக்கு ஜோடியாக மலையாளத்தில் அறிமுகமான அவர், முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். தமிழ் ரசிகர்களிடம் 'ஜகமே தந்திரம்', 'கேப்டன்', 'பொன்னியின் செல்வன்', 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட படங்கள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
தற்போது சாய் தரம் தேஜுடன் 'சம்பரால ஏடி கட்டு' மற்றும் மலையாளத்தில் 'ஆஷா' உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி, சமீபத்தில் 'கட்டா குஸ்தி 2' படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் தனது திருமணம் குறித்த மனநிலையில் ஏற்பட்ட மாற்றத்தை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

குழந்தை ஆசை: அதில், "தற்போதைய காலகட்டத்தில் திருமண அமைப்பில் பல சிக்கல்கள் இருப்பதாக முன்பு உறுதியாக நம்பினேன். அந்த எண்ணத்தில்தான் நீண்ட காலம் இருந்தேன். ஆனால் 'கட்டா குஸ்தி 2' படப்பிடிப்பின்போது ஒரு குழந்தையுடன் அதிக நேரம் செலவிட்டது என் மனநிலையை மாற்றியது. அந்தக் குழந்தையுடன் ஏற்பட்ட பாசப்பிணைப்பு, எனக்குள்ளும் தாய்மை உணர்வை ஏற்படுத்தியது. எனக்கும் ஒரு குழந்தை வேண்டும் என்ற ஆசை அப்போதுதான் அதிகமாக தோன்றியது" என்று கூறியுள்ளார்.
பார்ட்னர் இப்படி வேண்டும்: மேலும், "எனது குழந்தையை முழுப் பொறுப்புடன் பார்த்துக் கொள்ளும், நல்ல தந்தையாக இருக்கும் ஒரு மனிதர் என் வாழ்க்கைத் துணையாக வர வேண்டும் என்பதே இப்போது என் விருப்பம். அதற்காக திருமணம் என்பது ஒரு சட்டப்பூர்வமான உறவாக இருக்கலாம். முன்பு திருமணம் குறித்து மிகவும் பிடிவாதமாக இருந்த என் எண்ணங்கள் இப்போது மாறியுள்ளன. வாழ்க்கை அனுபவங்கள் என் சிந்தனையை மாற்றியுள்ளன" என்றும் தெரிவித்துள்ளார்.

வேதனை: அதேநேரத்தில், "நான் கூறிய கருத்துகளை சிலர், அதாவது, திருமணத்திற்கு முன்பே குழந்தை பெற்றுக் கொள்வதைஆதரிக்கிறேன் என்று திரித்தனர். அது எனக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. நான் கூறியதன் பொருள் அது அல்ல. என் கருத்துக்கள் தவறாகச் சித்தரிக்கப்பட்டது வருத்தமளித்தது" என்றும் ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கள் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.


Click it and Unblock the Notifications