கருணாநிதிக்கு மரியாதை! பட அறிவிப்பை தள்ளிவைத்த நடிகை!
நடிகை ஹன்சிகா 50வது பட அறிவிப்பை தள்ளி வைத்துள்ளார்.
சென்னை: கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக 50வது பட அறிவிப்பை ஹன்சிகா தள்ளி வைத்துள்ளார்.
ஜூனியர் குஷ்பு என்றழைக்கப்படும் நடிகை ஹன்சிகா இன்று தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி மும்பையில் பிறந்த ஹன்சிகா, ஷகலக பூம் பூம் என்ற மாயாஜாலத் தொடரின் மூலம் அறிமுகமானவர். தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்த அவர் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
இப்போது, பி ஹேப்பி பிந்தாஸ் என்ற கன்னட திரைப்படமும், மாப்பிள்ளை திரைப்பட மொழிமாற்று இந்தி படமான ஜமாய் ராஜாவும் ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன.
இந்த நிலையில், தன்னுடைய ஐம்பதாவது திரைப்படத்தின் தலைப்பை அவருடைய பிறந்தநாளான இன்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தார். ஹன்சிகாவின் முதல் தமிழ் பட கதாநாயகனான நடிகர் தனுஷ் அந்த அறிவிப்பை வெளியிடுவதாக இருந்தது.
இதற்கிடையில் எதிர்பாராத விதமாக திமுக தலைவர் கருணாநிதி இறந்ததால், தன்னுடைய 50வது படத்தின் அறிவிப்பை தள்ளி வைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தன்னுடைய 50வது திரைப்படத்தின் தலைப்பு இன்று அறிவிக்கப்படவில்லை என்றும், விரைவில் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படும் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











