அடங்காத கீர்த்தி சுரேஷ்.. அவரது அடுத்த ஹிந்தி பட ஹீரோ இவரா?.. இந்த முறையாவது தப்பிப்பாரா?
மும்பை: நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கடந்த வருடம்தான் ஆண்டனி தட்டில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இரண்டு பேரும் பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்துவந்தனர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் அவர் பிஸியாக இருக்கிறார் என்றே தெரிகிறது. கடைசியாக அவர் நடித்த பேபி ஜான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. ஹிந்தியில் தனக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த அவருக்கு பேபி ஜான் ரிசல்ட் அடியைத்தான் கொடுத்தது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முதல் படத்திலேயே அமைதியான, பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய அவர் தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை வெளி காண்பித்து மிகப்பெரிய ஹீரோயினாக வலம் வந்தார்.
தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் நடிகையர் திலகம் என்று புகழப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அதுவரை கீர்த்தி சுரேஷுக்கு நடிக்கவே தெரியவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் அந்தப் படத்தை பார்த்து வாயடைத்து போய்விட்டார்கள். மேலும் அப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ஆனால் தேசிய விருது பெற்றால் வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு தொடர்ந்து கிடைக்காது என்ற ராசிக்கேற்ப கீர்த்திக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது.

மீண்டும் பிஸி: அவ்வப்போது தமிழில் தலை காட்டி வந்த அவருக்கு மாமன்னன் படம் நன்றாக கம்பேக் கொடுத்தது.அதில் பெரிய ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்றாலும் கீர்த்திக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக மீண்டும் அவர் பிஸியானார். அதன்படி சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றாலும் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
திருமணம் செய்துகொண்ட கீர்த்தி சுரேஷ்: இதற்கிடையே கீர்த்தி சுரேஷின் காதல் பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் பரவிக்கொண்டே இருந்தன. அதற்கு அவரும் அவரது குடும்பத்தினரும் மௌனம் காத்து வந்தார்கள். சூழல் இப்படி இருக்க தான் பத்து வருடங்களுக்கும் மேலாக ஒருவரை காதலித்துவருவதாகவும் அவர் பெயர் ஆண்டனி தட்டில் என்றும் அறிமுகம் செய்துவைத்தார் கீர்த்தி. அதுமட்டுமின்றி கடந்த வருடம் அவருக்கு கோவாவில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடந்தது. இதில் விஜய், திரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள்.
ஹிந்தியில் கீர்த்தி: அதேபோல் திருமணத்துக்கு முன்பே அட்லீ தயாரிப்பில் தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் படத்தில் கமிட்டானார் கீர்த்தி. மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அந்தப் படத்தில் நடித்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. முதல் ஹிந்தி படமே இப்படி போய்விட்டதே என்று அப்செட்டில் இருக்கிறாராம் அவர். அதுமட்டுமின்றி தயாரிப்பாளரான இயக்குநர் அட்லீக்கும் பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது.
ரன்பீர் கபூருக்கு ஜோடி: இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி மேலும் ஒரு ஹிந்தி படத்தில் கீர்த்தி கமிட்டாகியிருப்பதாகவும்; அந்தப் படத்தில் ஹீரோவாக ரன்பீர் கபூர் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் இந்த ஹிந்தி படமாவது கீர்த்திக்கு ஹிட்டாக அமையுமா என்று கேள்வி எழுப்ப தொடங்கியிருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











