ராதிகா பிறந்தநாள்.. மலைக்க வைக்கும் சொத்து மதிப்பு.. யப்பா இவ்வளவு கோடியா?
சென்னை: நடிகை ராதிகா கோலிவுட்டில் சீனியர் நடிகைகளில் ஒருவர். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் மிகச்சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். சரத்குமாரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அவர் தற்போதும் சினிமாவில் பிஸியாக நடித்துவருகிறார். இந்தச் சூழலில் அவர் இன்று தனது 62ஆவது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் அவரது மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ்நாட்டில் தவிர்க்கவே முடியாத ஆளுமை எம்.ஆர்.ராதா. பெரியாரின் தீவிர தொண்டரான அவருக்கு பிறந்தவர்தான் ராதிகா. வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு இந்தியாவுக்கு வந்திருந்த அவரை எதேச்சையாக பார்த்த பாரதிராஜா கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப்படுத்தினார். ஆனால் முதலில் படத்தில் நடிப்பதற்கு ராதிகாவுக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் விடாத பாரதிராஜா எப்படியோ ராதிகாவிடம் பேசி சம்மதிக்க வைத்துவிட்டார்.

முன்னணி நடிகை: ராதிகாவின் முதல் படமான கிழக்கே போகும் ரயில் மெகா ஹிட்டடித்தது. முக்கியமாக ராதிகாவின் நடிப்புக்கு ரசிகர்களிடையே நல்ல அப்ளாஸ் கிடைத்தது.முதல் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததை தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து டாப் நடிகையாக வலம் வர ஆரம்பித்தார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தையும் காண்பிக்க ஆரம்பித்தார்.
திருமணம்: சினிமாவில் பீக்கில் இருந்தபோது அவர் நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவர்களது திருமண உறவு பாதியில் முடிந்தது. இதனையடுத்து நடிகர் விஜயகாந்த்தை அவர் தீவிரமாக காதலித்ததாகவும் ஆனால் அந்தக் காதல் சில காரணங்களால் கைகூடாமல் போனதாகவும் ஒரு பேச்சு உண்டு. இறுதியாக நடிகர் சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
பிஸியான நடிகை: ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைய ஆரம்பிக்க குணசித்திர வேடங்களில் நடித்து ரகளை செய்தார் ராதிகா. ஜீன்ஸ், சூர்யவம்சம், தர்மதுரை உள்ளிட்ட படங்களில் தனது அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்திலும் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்த அவர்; கடைசியாக மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் நடித்திருந்தார். சினிமா தவிர்த்து சின்னத்திரையில் சித்தி, அண்ணாமலை, செல்லமே, வாணி ராணி, சித்தி 2 என ஏகப்பட்ட சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.'
ராதிகா சொத்து மதிப்பு: இந்நிலையில் அவர் இன்று தனது 62ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார். இந்தச் சூழலில் ராதிகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவருக்கு மொத்தம் 120 கோடி ரூபாய்வரை சொத்து மதிப்பு இருக்கிறதாக கூறப்படுகிறது. சென்னையில் ஒரு பிரமாண்டமான வீடு இருக்கிறது. மேலும் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களில் முதலீடு செய்திருப்பதாகவும் அதன் மூலமும் அவருக்கு வருமானம் கொட்டுகிறது என்றும் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











