இது என்ன எட்டி பார்க்குற வேல.. இங்க வெச்சுக்காத.. சாய் பல்லவியை கடிந்துகொண்ட செல்வராகவன்
சென்னை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாய் பல்லவி. அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. அதில் சாய் பல்லவி ஏற்றிருந்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இன்றுவரை பலரது ஃபேவரைட்டாக இருக்கிறது. முதல் படத்திலேயே சாய் பல்லவிக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை அடுத்து தமிழிலும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இப்போது அவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அமரன் படத்தில் நடித்திருக்கிறார். இந்தச் சூழலில் NGK படத்தில் நடந்த சம்பவம் குறித்து தெரியவந்திருக்கிறது.
தமிழ் சினிமாவில் தமிழ்நாட்டை சேர்ந்த கதாநாயகிகள் கிடைப்பது குறிஞ்சி பூ பூப்பது போன்றது. பல வருடங்களுக்கு ஒருமுறைதான் அப்படி ஒருவர் கிடைப்பார். அந்தவகையில் கிடைத்தவர்தான் சாய் பல்லவி. இயற்கை அழகில் கொஞ்சும் நீலகிரியில் பிறந்ததால் என்னவோ இயற்கையான அழகோடு ஜொலிப்பவர். கோயம்புத்தூரில் படித்த சாய் பல்லவி ஜார்ஜியாவில் மருத்துவம் படித்தவர். மருத்துவராக மாற வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.

நடன சாய் பல்லவி: மருத்துவத்தின் மீது அவருக்கு எப்படி ஆர்வம் இருந்ததோ அதே ஆர்வம் நடனத்தின் மீதும் இருந்தது. அதன் காரணமாக தனது தாயின் மூலம் நடனத்தை கற்றுக்கொண்டார். தொடர்ந்து நடனம் ஆடிக்கொண்டிருந்தவருக்கு சேனல் ஒன்றில் நடந்த நடன போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அந்த அரங்கத்தில் ஆடிய ஒவ்வொரு நடனத்தின் அசைவும் அனைவரையும் கவர்ந்தது.
மனதை திருடிய மலர் டீச்சர்: இதனையடுத்து பிரேமம் படத்தில் அறிமுகமானார் சாய் பல்லவி. முதல் படத்தில் அலட்டல் இல்லாத அழகுடன் அவரது இயல்பான முக பாவனைகளும், நடிப்பும் மலர் டீச்சரை பார்த்த ஒவ்வொரு ரசிகரும் தங்களது நெஞ்சத்தில் குத்தி வைத்துக்கொண்டனர். பிரேமம் படத்தில் அவரது நடிப்பை பார்த்தால் நடிப்பின் மீது ஆர்வம் இல்லாதவரா இப்படி நடிக்கிறார் என்ற கேள்வி அனைவரிடமும் எழும். அந்த அளவுக்கு பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு என அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
எதார்த்த அழகுதான் பிடிக்கும்: ஹீரோயின் என்றாலே மேக்கப்புகளை அள்ளி பூசிக்கொண்டு, வித விதமான உடையை அணிந்துகொண்டு, வழவழப்பான மரு இல்லாத கன்னங்களுடன் வலம் வர வேண்டும் என ஒரு விதி இருந்தது. அதை உடைத்ததில் பெரும் பங்கு சாய் பல்லவிக்கு உண்டு. அவரை பார்த்தால் நம்மிலிருந்து ஒரு பெண் நடிக்க சென்றிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பார். நிகழ்ச்சிகளுக்கு வந்தால் திகட்டாத மேக்கப், உடைகள் என எதையும் அணிந்துகொள்ளாமல் வெகு இயல்பாக தோன்றுவதாலேயே ரசிகர்கள் சாய் பல்லவியை தங்கள் வீட்டு பெண்ணாக நினைக்க தொடங்கியிருக்கின்றனர்.
பிஸி சாய் பல்லவி: அவர் தற்போது பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக நடித்த கார்கி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் அமரன், தெலுங்கில் தண்டல், ஹிந்தியில் ஒரு படம் என பிஸியான நடிகையாக வலம்வருகிறார். இந்தச் சூழலில் NGK படத்தில் நடந்த சம்பவம் குறித்து நடிகை உமா ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
உமா பேட்டி: NGK படத்தில் சூர்யாவுக்கு தாயாக நடித்த உமா அளித்த பேட்டி ஒன்றில், "செல்வராகவன் படம் என்றால் ஸ்ட்ரிக்ட்தான். பொதுவாக படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் ஒரு ஷாட் முடிந்ததும் இயக்குநரிடம் இருக்கும் மானிட்டரை வந்து பார்ப்பார்கள். ஆனால் செல்வராகவன் ஷூட்டிங்கில் அதெல்லாம் கிடையாது. பெரிய நடிகராக இருந்தாலும் மானிட்டரை பார்க்க முடியாது. அப்படி ஒருமுறை NGK பட ஷூட்டிங்கில் சாய் பல்லவி ஒரு காட்சியை நடித்து முடித்துவிட்டு; எப்படி இருக்கிறோம் என்பதை பார்க்க மானிட்டரை எட்டி பார்த்தார். அதனை கவனித்த செல்வராகவன், 'என்ன இங்க எட்டி பார்க்குற.. அந்த வேலை எல்லாம் இங்க வெச்சுக்கக்கூடாது.. போ' என்று சொல்லிவிட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











