நயன்தாராவின் அடுத்த படம் என்ன தெரியுமா?.. யூட்யூபர்தான் கதை எழுதுறாராம்
சென்னை: நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். அவருக்கு அந்தப் படம் 75ஆவது படம். ரொம்பவே எதிர்பார்த்திருந்த நயனுக்கு அன்னபூரணி ஏமாற்றத்தையே கொடுத்தது. தற்போது மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா பல பிரச்னைகளை சந்தித்திருக்கிறார். அந்த பிரச்னைகளை கண்டு துவளாமல் ஃபீனிக்ஸ் பறவையாய் வீறுகொண்டு எழுந்தவர் அவர். ஒரு காதலுக்காக சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர்; பிறகு மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதன்படி தனது இரண்டாவது இன்னிங்ஸில் கவனத்துடன் கதைகளை தேர்ந்தெடுத்து; தான் வெறும் கிளாமர் ஹீரோயின் இல்லை நடிக்க தெரிந்த ஹீரோயின் என்று நிரூபித்தார்.

காதல்: இரண்டாவது இன்னிங்ஸில் அவர் நடித்த முக்கியமான படங்களில் ஒன்று நானும் ரௌடிதான். அந்தப் படம் அவருக்கு நல்ல பெயரை மட்டும் பெற்றுக்கொடுக்காமல் நல்ல காதலையும், காதலரையும் பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தில் நடித்தபோது அதன் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார் நயன். அவருடன் விக்னேஷ் சிவன் இளையவர் என்றாலும்; காதலுக்கு வயது தேவை இல்லை மனது போதும் என்ற கோட்பாட்டின்படி இருவரும் காதலித்துக்கொண்டே லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்தனர்.
திருமணம்: கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக லிவிங்கில் வாழ்ந்த அவர்கள்; கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக திருமணம் செய்துகொண்டனர். அதில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அஜித் மனைவி ஷாலினி, அட்லீ உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன்தாரா. அவரது நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் ஜவான், தமிழில் அன்னபூரணி ஆகிய படங்கள் வெளியாகின.
இரண்டு குழந்தைகள்: திருமணம் ஆன கையோடு வாடகை தாய் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார் நயன். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார். நயன் எது செய்தாலும் சர்ச்சையாக்கப்படும் என்பதற்கேற்ப; இந்த வாடகை தாய் விவகாரமும் சர்ச்சையாக்கப்பட்டது. ஆனால் அரசு நடத்திய விசாரணையில், வாடகை தாய் விஷயத்தில் நயன்தாரா எந்த விதிமீறலும் செய்யவில்லை என்பது உறுதியானது.
பிஸியான நடிகை: ஒருபக்கம் குடும்பத்தில் கவனம் செலுத்திவரும் நயன்தாரா மறுபக்கம் சினிமாவிலும் கவனம் செலுத்திவருகிறார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துவந்த நயன்; ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார். அந்தவகையில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் லீடு ரோலில் நடித்திருந்தார் நயன்.
அடுத்த படம்: தமிழைப் பொறுத்தவரை மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி பிரபல திரை விமர்சகரும், யூட்யூபருமான பரத்வாஜ் ரங்கன் கதையில் நடிக்கவிருப்பதாகவும்; அந்தப் படத்தை சர்ஜுன் என்பவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர்த்து மலையாளத்தில் டியர் ஸ்டூடண்ட் என்ற படத்திலும் கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











