நயன்தாரா, சமந்தா, அமலா பால் யாருக்கு முதலிடம்.. 2019-ன் டாப் 10 ஹீரோயின் இவங்கதான்!
சென்னை: தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிகளவில் புதுமுக நடிகைகள் திரைக்கு வந்தாலும், கோலிவுட்டில் கோலோச்சி வரும் முன்னணி நாயகிகளே இந்த ஆண்டும் தங்களது அனுபவம் வாய்ந்த நடிப்பால் அசத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு அரை டஜனுக்கும் மேலாக படங்களை கொடுத்த நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடித்து வந்த நயன்தாரா இந்த ஆண்டு, அஜித், விஜய் என இரு பெரும் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
ஹீரோக்களுடன் நடித்து வந்த அமலா பால் இந்த ஆண்டு ஹீரோயின் சென்ட்ரிக் படத்தில் அதுவும் ஆடைகள் இன்றி நடித்து இந்தியாவையே அதிரவைத்தார்.
2020ம் ஆண்டை வரவேற்க உள்ள நிலையில், 2019ம் ஆண்டில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய டாப் 10 நடிகைகள் யார் யார் என்பதை இங்கே காண்போம்.

10. பிரியா பவானி சங்கர்
ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படத்தில் அழகு பதுமையாக ஹோம்லி லுக்கில் டீசன்ட்டான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை பிரியா பவானி சங்கர் இந்த ஆண்டு சிறந்த நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள மாஃபியா, இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்கள் பிரியா பவானி சங்கர் லைன் அப்பில் காத்துக் கிடக்கின்றன.

9. த்ரிஷா
அஜித், விஜய், விக்ரம், சூர்யா, கமல் என கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்திருக்கும் நடிகை த்ரிஷாவுக்கு நீண்ட காலமாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. இந்த ஆண்டு வெளியான பேட்ட படத்தில் அந்த ஆசை நிறைவேறியுள்ளது. கடந்த ஆண்டு 96 படத்தில் கலக்கிய நடிகை த்ரிஷா, அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ராங்கி, பரமபதம் உள்ளிட்ட படங்களிலும் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

8. ஐஸ்வர்யா ராஜேஷ்
அம்மா ரோல் என்றாலும், தங்கை ரோல் என்றாலும், நாயகியாக இருந்தாலும் நடிப்பில் வெளுத்து வாங்கி வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் தங்கையாக நடித்து அசத்தியுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்ததாக வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல படங்களில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

7. தமன்னா
தமன்னா நடிப்பில் இந்த ஆண்டு தமிழில் பெட்ரோமாக்ஸ், ஆக்ஷன் மற்றும் தெலுங்கு ரீமேக் ஆன சைரா நரசிம்ம ரெட்டி என மூன்று படங்கள் வெளியாகின. மூன்று படங்களிலும் தன்னுடைய பங்கை நடிகை தமன்னா சிறப்பாக செய்திருந்தார். ஆக்ஷன் படத்தில் கடும் ரிஸ்க் எடுத்து தமன்னா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

6. ஜோதிகா
ராட்சசி, ஜாக்பாட், தம்பி என இந்த ஆண்டு இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுத்து நடிகை ஜோதிகா அசத்தியுள்ளார். ராட்சசி படத்தில் அரசு பள்ளி தலைமை ஆசிரியராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜோதிகா, ஜாக்பாட் படத்தில் ஆக்ஷன் ஹீரோயின் அவதாரமெடுத்திருந்தார். கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள தம்பி படத்திலும் ஜோதிகாவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

5. காஜல் அகர்வால்
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தில் நாயகியாக நடித்து அசத்தியிருந்தார் காஜல் அகர்வால். துப்பாக்கி படத்தில் பார்த்தது போலவே அதே இளமையுடனும் துள்ளலுடனும் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வரும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவான பாரிஸ் பாரிஸ் படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு, இதுவரை ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருக்கிறது.

4. ஷ்ரத்தா ஸ்ரீநாத்d
பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகர் அஜித்துடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பவர்ஃபுல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கண்ணீர், கோபம், தைரியம், பயம், சோகம் என நேர்கொண்ட பார்வை படத்தில் தனது உச்சக்கட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஷ்ரத்தா.

3. சமந்தா
தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், ஃபகத் ஃபாசில் என சீனியர் நடிகர்களுடன் வேம்பு கதாபாத்திரத்தில் தனது தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டி உலகப் புகழ் பெற்றார் நடிகை சமந்தா. தெலுங்கில் வெளியான ஓ பேபி படமும் இந்த ஆண்டு சமந்தாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

2. நயன்தாரா
பொங்கலுக்கு தல அஜித்துடன் விஸ்வாசம், தீபாவளிக்கு தளபதி விஜய்யுடன் பிகில் என இந்த ஆண்டு பண்டிகை நாட்களில் பறந்தது லேடி சூப்பர்ஸ்டாரின் கொடி தான். அதுமட்டுமின்றி, ஐரா, மிஸ்டர் லோக்கல், சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், மலையாளத்தில் லவ் ஆக்ஷன் டிராமா என பல படங்களில் நடித்து இந்த ஆண்டும் தான் லீடிங் லேடி என நிரூபித்துள்ளார்.

1. அமலா பால்
மேயாத மான் படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் நடிகை அமலா பால் ஆடையின்றி நிர்வாணமாக நடித்த ஆடை படம் இந்த ஆண்டு வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நிர்வாணமாக நடித்திருந்தாலும், யாரையும் முகம் சுழிக்க வைக்காமல், திறம்பட இந்த படத்தை கையாண்டு இருந்தனர். பல ஹீரோயின்கள் இந்த படத்தில் நடிக்க மறுத்த நிலையில், நடிகை அமலா பால் காமினியாக நடித்து கலக்கி இருந்தார். இந்த படத்தில் நடித்ததன் காரணத்தால் பல படங்களை இழக்க நேரிட்டாலும், நடிப்பின் மீது கொண்ட வெறியால் இந்த படத்தில் நடித்த அமலா பாலுக்கு நிச்சயம் இந்த இடம் உகந்தது தான் என கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications











