Asin - அசின் சினிமா வாழ்க்கை காலியாக "இதுவா" காரணம்?.. புதிதாக பரவும் பரபரப்பு தகவல்
சென்னை: Asin (அசின்) அசினின் சினிமா வாழ்க்கை காலியானதற்கு என்ன காரணம் என்று பட்டிமன்றமே நடந்துவந்த நிலையில், இது தொடர்பாக, சில புதிய தகவல்கள் வெளியாகி தீயாக பரவி உலா வருகின்றன. கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அசின், தமிழில் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த அந்தப் படத்தில் அசின் கதைப்படி கேரள பெண்ணாகவே நடித்து மலையாளம் கலந்த தமிழில் பேசி அசரடித்தார்.முக்கியமாக முதல் படத்திலேயே சொந்தக் குரலில் டப்பிங் பேசி ஆச்சரியப்படுத்தினார்.

டாப் நடிகை: அந்தப் படத்துக்கு பிறகு அசினுக்கு வாய்ப்புகள் மலை போல் குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டார். இதன் காரணமாக கோலிவுட்டில் அசின் அலை பலமாகவே அடித்தது. முக்கியமாக அசினிடம் அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை அவரது நடிப்பு பலமாகவே உணர்த்தீயது.
கஜினி: பெரும்பாலும் ஒரு நடிகருக்குத்தான் தான் நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது நடக்கும். ஆனால் நடிகைகளில் அரிதாக அசினுக்கு அது நடந்தது. விஜய்யுடன் நடித்த போக்கிரி, அஜித்துடன் நடித்த ஆழ்வார் ஆகிய இரண்டு படங்களுமே ஒரே நாளில் ரிலீஸாகின. இதற்கிடையே அசினை செம ஃபெர்பார்மராக காட்டிய படம் என்றால் அது கஜினிதான். அதில் அவர் ஏற்றிருந்த கல்பனா கதாபாத்திரத்தை இன்றுவரை ரசிகர்கள் மறக்காமல் கொண்டாடிவருகின்றனர்.
பாலிவுட் டூ திருமணம்: தமிழில் செம பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த அசின் பாலிவுட் பக்கம் சென்று அங்கு அமீர் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் உள்ளிட்டோருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஆனால் தன்னுடைய கரியர் பீக்கில் இருந்தபோதே மைக்ரோமேக்ஸ் CEO ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டிலாகிவிட்டார். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
சறுக்கிய அசின்: கோலிவுட்டிலிருந்து ஏற்கனவே ஸ்ரீதேவி உள்ளிட்ட நடிகைகள் பாலிவுட் சென்று வெற்றிக்கொடியை நாட்டினர். அவர்களுக்கு பிறகு நடிகை அசின் அந்தப் பெருமையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றபடிதான் அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் நடித்த ஹிந்தி படங்கள் சரியாக ஓடவில்லை.
அவர் நடிப்பில் வெளியான ஹவுஸ்ஃபுல், ரெடி, போல் பச்சான், கில்லாடி 786 ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதனையடுத்து அவர் மீண்டும் தமிழ் பக்கம் ஒதுங்கலாம் என்று முடிவெடுத்ததாகவும் ஆனால் சில அரசியல் சூழ்நிலை காரணமாக அவருக்கு பழையபடி கோலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
என்ன காரணம்?: அதாவது அசின் சல்மான் கானுடன் ரெடி படத்தில் நடித்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்குக்காக இலங்கை சென்றார் அவர். அந்த சமயத்தில் ஈழ இறுதிப்போர் நடந்து லட்சக்கணக்கான தமிழர்கள் கொத்து கொத்தாக இறந்திருந்தனர். அந்தப் போரின் தாக்கம் தமிழ்நாட்டில் அதிக அளவு இருந்தது. எனவே இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் பிரபலமானவர்கள் இலங்கைக்கு செல்லக்கூடாது என்ற வாதங்களும் முன்வைக்கப்பட்டன.
ஆனால் அசினோ நாம்தான் பாலிவுட் பக்கம் ஒதுங்கிவிட்டோமே தமிழ்நாட்டின் அழுத்தமும், சூழலும், தன்னை பாதிக்காது என்று நினைத்து இலங்கைக்கும் சென்றுவிட்டார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பாலிவுட் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. எனவே மீண்டும் கோலிவுட்டுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்ததாகவும், அப்போது அசின் இலங்கைக்கு சென்ற விவகாரம் அவருக்கு எதிராக திரும்பியதால் கோலிவுட்டிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவேதான் அவர் ராகுலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார் என்றும் பரபர தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











