சமீரா ரெட்டிக்கு இருந்த பிரச்சனை: உதவி செய்து வாழ்க்கையை மாற்றிய ஹேன்ட்சம் ஹீரோ
மும்பை: தனக்கு திக்கித் திக்கி பேசும் பிரச்சனை இருந்தபோது பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் உதவி செய்ததாக நடிகை சமீரா ரெட்டி தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக கர்ப்பமான சமீரா ரெட்டி கடந்த மாதம் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு நைரா என்று பெயர் வைத்துள்ளார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்து சமீரா பேசி வருகிறார்.

சமீரா தனக்கு திக்கித் திக்கி பேசும் பிரச்சனை இருந்ததாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது,
எனக்கு திக்கித் திக்கி பேசும் பிரச்சனை இருந்ததால் மற்றவர்கள் முன்பு பேச சங்கடப்படுவேன். குறிப்பாக ஆடிஷன்களுக்கு சென்றால் அங்கிருப்பவர்கள் என்னை ஏதாவது சொல்வார்களோ என்று தயங்குவேன். எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை கவனித்த நடிகர் ரித்திக் ரோஷன் ஒரு புத்தகத்தை கொடுத்தார்.
அந்த புத்தகத்தால் என் வாழ்க்கையே மாறிவிட்டது. எனக்கு இருந்த பயம் எல்லாம் போய்விட்டது. மேலும் நான் திக்காமல் பேச ஆரம்பித்தேன் என்றார்.

ரித்திக் ரோஷனுக்கு திக்கித் திக்கி பேசும் பிரச்சனை இருந்தது. அதனால் தான் அவருக்கு சமீராவின் கஷ்டம் புரிந்து உதவி செய்துள்ளார். பாலிவுட்டின் மிகவும் அழகான நடிகர் என்று பெயர் பெற்றவர் ரித்திக். தனக்கு இருந்த பிரச்சனை குறித்து ரித்திக் கூறியதாவது,
சரளமாக பேச தினமும் பயிற்சி எடுத்தேன். தற்போதும் கூட தினமும் ஒரு மணிநேரம் பயிற்சி செய்கிறேன். இந்த பேச்சு பிரச்சனை என் குழந்தை பருவத்தில் பெரிய விஷயமாக இருந்தது. நான் நடிகையான பிறகு விருது பெற துபாய் செல்ல வேண்டி இருந்தது.
விருது விழாவில் துபாய் என்ற வார்த்தையை சொல்ல நான் கடினமாக பயிற்சி எடுத்தேன். அதன் பிறகே விழாவில் என்னால் பிரச்சனை இல்லாமல் பேச முடிந்தது என்றார்.
திக்கித் திக்கி பேசுவது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. பயிற்சி பெற்றால் அதில் இருந்து மீளலாம் என்று ஊக்குவித்து வருகிறார் ரித்திக் ரோஷன் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











