முதல்ல சரத்குமாரை பார்த்தப்பவே ஓங்கி அறையணும்னு தோணுச்சு.. சரத்குமாரை கலாய்த்த ராதிகா
சென்னை: நடிகர் சரத்குமார் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில், சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் நடிகை ராதிகா பேசிய வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக சரத்குமாரின் "மொக்க ஜோக்ஸ்" பற்றி அவர் பேசிய விதம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
அந்த விருது விழாவில், சிறந்த அம்மாவுக்கான விருதை ராதிகாவுக்கு அவரது மகள் ரயான் வழங்கினார். விருதை பெற்றுக் கொண்டு பேசிய ராதிகா, தனது குடும்ப வாழ்க்கை, சரத்குமார் மற்றும் குழந்தைகள் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது சரத்குமாரை முதன்முதலாக சந்தித்த அனுபவத்தை நினைவு கூர்ந்த ராதிகா, "அவரை முதல் தடவையாக பார்த்தப்போதே ஓங்கி அறையணும்னு தோணுச்சு. ஏன்னா, அவர் வந்து ஒரு மொக்க ஜோக் சொல்லிட்டு, அதுக்கே அவரே சிரிச்சிட்டே இருந்தார். நான் மட்டும் சிரிக்கவே இல்ல. இதைவிட நல்ல ஜோக் எதுவும் உங்களுக்குத் தெரியாதா?ன்னு கேட்டேன். இப்போ வரைக்கும் அந்த பழக்கம் மட்டும் மாறவே இல்ல. மொக்க ஜோக்ஸ்னா அதுக்கு ஒரு யுனிவர்சிட்டியே சரத்குமார் தான். எந்நேரமும் ஏதாவது ஒரு ஜோக் ரெடியா இருக்கும்.
இதைத்தொடர்ந்து ரயானும் பேசும்போது, "நான் சமூக வலைதளங்களில் மொக்க ஜோக்ஸ் போடுறதுக்கு முக்கிய காரணமே அவர்தான். அவர்கிட்ட இருக்கிற மொக்க ஜோக்ஸ்க்கு பதிலடி கொடுக்கணும்னுதான் நான் வீடியோ போட ஆரம்பிச்சேன். ஆனா நான் போடுற ஜோக்ஸ் எல்லாமே சமூக வலைதளங்களில் இருந்து எடுத்ததுதான் என்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குரோஷியின் கேள்விக்கு பதில் அளித்தார்.

அதே நிகழ்ச்சியில், ஒரு அப்பாவாக சரத்குமார் எப்படி இருக்கிறார் என்பதையும் ராதிகா மனம் திறந்து பேசினார். "ரயானை நான் சிங்கிள் பேரெண்ட்டாக வளர்த்தேன். நல்லது, கெட்டது, வாழ்க்கை அனுபவம் எல்லாத்தையும் நானே சொல்லிக் கொடுத்தேன். ஆனால் என் மகன் விஷயத்தில் அப்படியில்லை. நான் ஏதாவது சொல்லப் போனாலே, 'விடு... நான் பேசிக்கிறேன்'ன்னு சரத் உடனே சொல்லிடுவார். அவனோட எல்லாவற்றையும் முழுக்க அவர்தான் பார்த்துக்கிறாரு. அதுக்கான பலன் என்னன்னு பையன் வளர்ந்து பெரியவனான பிறகுதான் தெரியும்" என்றும் அவர் கூறினார்.
சரத்குமாரின் பிறந்தநாளன்று இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. "சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக மிரட்டும் சரத்குமார், வீட்டுக்குள் மட்டும் மொக்க ஜோக்ஸ் சொல்லி குடும்பத்தையே சிரிக்க வைக்கிறாரே!" என்றும், "ராதிகாவும் ரயானும் சேர்ந்து சரத்குமாரை செமையாக கலாய்த்திருக்காங்க" என்றும் ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து ரசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications