டைரக்டர் சொல்வதைக் கேட்டு நடிக்கமாட்டேன் - நித்யா மேனன்
இயக்குநர் சொல்கிறபடியெல்லாம் நான் நடிக்க மாட்டேன். அவர்கள் சொல்வதை இன்னும் மெருகேற்றும் வகையில் நடிப்பேன், என்கிறார் நடிகை நித்யா மேனன்.
'180' என்ற படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நித்யா மேனன்.
தமிழில் அவர் நடித்த இரண்டு படங்களுமே ஓடவில்லை. ஆனால் வாய் மட்டும் காது வரை நீள்கிறது.

என்ன வாய், என்ன வாய்...
இப்போது சேரன் இயக்கத்தில் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, மற்றும் ஸ்ரீபிரியாவின் மாலினி 22 பாளையங்கோட்டை (மலையாளப் பட ரீமேக்) படங்களில் நடிக்கிறார்.
இவரை நடிகைகளில் அறிவு ஜீவி என சேரன் போன்றவர்கள் புகழ்ந்ததில், ஏற்கெனவே எக்கச்சக்கமாக பேசும் நித்யா, இப்போது ஆணாதிக்கம், நடிப்புன்னா என்ன தெரியுமா.. என்கிற ரேஞ்சுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்.

கவர்ச்சி பிடிக்காது
சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் நடிப்பைத்தான் நம்புகிறேன், கவர்ச்சியை நம்பவில்லை (அம்மணியிடம் அப்படி ஒன்று இல்லை!).
டைரக்டர் சொல்வதை கேட்டு அப்படியே நான் நடிப்பது எனக்குப் பிடிக்காது. அவர் சொல்வதை இன்னும் எப்படி மெருகேற்றலாம் என்று யோசித்து, கூடுதல் திறமை காட்டி நடிக்கிறேன். அதனால்தான் அந்தக் காட்சிகள் பாராட்டு பெறுகின்றன.

சம்பளம் முக்கியமில்லை
எனக்கு சம்பளம் முக்கியம் அல்ல. நல்ல கேரக்டர்தான் முக்கியம். சம்பளத்துக்காக மட்டுமே நடித்திருந்தால் இந்நேரம் நான் காணாமல் போயிருப்பேன் (ஆமா... அப்படி எத்தனை படங்கள் நீங்க நடிச்சிட்டீங்க!)

ஆணாதிக்கம்
சினிமா உலகமே ஆணாதிக்கம் மிக்கதுதான். இங்கு கதாநாயகர்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கதாநாயகிகளை பொம்மை மாதிரி பயன்படுத்துகின்றனர்.
என்னோடு நடிக்கும் ஹீரோக்கள் பற்றி நான் விசாரிப்பது இல்லை. என் வேடங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். எல்லா வேடங்களிலும் என்னால் நடிக்க முடியும் என்ற பெயர் வாங்க வேண்டும் அதுவே என் ஆசை..." இப்படிப் போகிறது அந்தப் பேட்டி.
நூறு படங்கள் தாண்டிய நடிகைகள் கூட இப்படியெல்லாம் பேட்டி கொடுப்பதில்லை...!


Click it and Unblock the Notifications











