சினிமாவில் என்னைத் தப்பா வழிநடத்தினார்கள்!- நடிகை மீனா
சினிமாவில் என்னை நிறையபேர் தவறாக வழிநடத்தினார்கள் என்று கூறியுள்ளார் பிரபல நடிகை மீனா.
திருமணமாகி, குழந்தை பெற்ற பிறகு மீண்டும் நடிக்க வந்த மீனாவுக்கு, மலையாளத் திரையுலகம் மீண்டும் ஹீரோயின் அந்தஸ்து கொடுத்துள்ளது.
மோகன் லாலுக்கு ஜோடியாக அவர் நடித்த த்ரிஷ்யம் படம் பெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது மம்முட்டியுடன் பால்யகாலசகி படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல வாய்ப்புகள் அவருக்கு வர ஆரம்பித்துள்ளனவாம்.

நான்கு வயதிலிருந்து
இதுகுறித்து மீனா கூறுகையில், "நான்கு வயதில் நடிக்க வந்தேன். என் வாழ்க்கை முழுக்க சினிமாதான். குழந்தை பெற்ற பிறகும்கூட சினிமாவில்தான் இருக்கிறேன்.

ஒரே டேக்தான்
சிவாஜி, ரஜினி, கமல், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி என பெரிய நடிகர்களுடன் நடித்து இருக்கிறேன். என்னை ஒரே டேக்கில் நடிக்கும் நடிகை என அழைப்பார்கள். ஒரு டேக் மேல் வாங்கினால் வருத்தப்படுவேன்.

நீலாம்பரியாக...
தேவர் மகன் படத்தில் ரேவதி நடித்த வேடமும், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த நீலாம்பரி கேரக்டரும் முதலில் எனக்குதான் வந்தன. நான் அப்போது மறுத்துவிட்டேன். பின்னர் வருத்தப்பட்டேன்.

தவறாக
நான் யதார்த்தமானவள். இதே சினிமாவில் பலர் என்னை தவறாக வழிநடத்தியுள்ளனர். அதுபற்றி வருத்தம் இல்லை. இன்னும் சினிமாவில் நான் இருக்கிறேன் என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.

த்ரிஷ்யம்
சமீபத்தில் மோகன்லாலுடன் நடித்த ‘திரிஷ்யம்' மலையாளப் படம் பெரிய வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்கள் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள்.

கதை நல்லாருந்தா போதும்
இப்போது கதை நன்றாக இருந்தால் போதும். முன்னணி நடிகர்கள் இல்லாவிட்டாலும் படங்கள் ஜெயிக்கின்றன. தமிழில் பீட்சா போன்ற படங்கள் நல்ல உதாரணம்.

நல்ல வேடங்கள் அமைவதில்லை
இப்போதைய நடிகைகள் திறமைசாலிகளாக இருந்தாலும், நன்றாக நடித்தாலும், அன்றைய நடிகைகளான பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி போன்றவர்களுக்குக் கிடைத்த மாதிரி வேடங்கள் கிடைப்பதில்லை.

மீண்டும் தமிழில்
மலையாளத்தில் நாயகியாக நடிப்பது சந்தோஷமாக உள்ளது. இதே போன்ற வாய்ப்புகள் தமிழில் அமையாதது வருத்தமாக உள்ளது. விரைவில் தமிழிலும் எனக்கு நல்ல வேடங்கள் கிடைக்கும் என நம்புகிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











