RRR ஹீரோக்களுடன் அடுத்தடுத்து ஜோடி சேரும் ஜான்வி கபூர்.. பிறந்தநாளில் இதைவிட பெரிய பரிசு கிடைக்காது!
ஹைதராபாத்: நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமான நிலையில், அடுத்து தமிழ் சினிமாவில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டோலிவுட்டில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக தேவரா படத்தில் நடித்து வருகிறார்.
27வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் ஜான்வி கபூர் அடுத்ததாக இன்னொரு ஆர்ஆர்ஆர் பட ஹீரோவுக்கு ஜோடியாகப் போகும் அறிவிப்பு காலையிலேயே பிறந்தநாள் பரிசாக வந்து விட்டது.

பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய சினிமாவில் பெரியளவில் கவனத்தை திருப்பி உள்ளார் நடிகை ஜான்வி கபூர் எனக் கூறுகின்றனர்.
27 வயசு: தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்தவர் ஜான்வி கபூர். 1997ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மும்பையில் பிறந்த ஜான்வி கபூர் மராத்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற சைரத் படத்தின் இந்தி டப்பிங் படமாக தடக் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். சாதி வெறியால் திருமணமாகி வீட்டை விட்டு வெளியூருக்கு சென்று வாழ்ந்து வரும் ஜோடியினரை தேடிச் சென்று வெட்டுவது போன்ற கெளரவக் கொலையை அடிப்படையாகக் கொண்டு உருவான கதையில் முதன் முறையாக நடித்து கவனத்தை ஈர்த்தார் ஜான்வி கபூர்.
ஜூனியர் என்டிஆருக்கு ஜோடி: கோலமாவு கோகிலா, ஹெலன் ரீமேக் என பல ரீமேக் படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் தேவரா படத்தில் ஹீரோயினாக நடித்து தென்னிந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கிறார்.
அம்பானி வீட்டுத் திருமணத்தில் ஆட்டம்: நடிகை ஜான்வி கபூர் அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவுடன் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் படு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார். மேலும், தனது கடவுளே ரிஹானா தான் என்றெல்லாம் ட்வீட் போட்டு ரிஹானாவின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றார் ஜான்வி கபூர்.
ராம்சரணுக்கு ஜோடி: ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் தேவரா படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர் அடுத்ததாக ராம்சரண் நடிப்பில் உருவாக உள்ள ஆர்சி 16 படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி உள்ளார். ஜான்வி கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே இந்த சூப்பரான பரிசு அவருக்கு கிடைத்திருக்கிறது. சூர்யாவுக்கு ஜோடியாக கர்ணன் படத்தில் அப்போ நடிப்பாரா? மாட்டாரா என தெரியவில்லையே என ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

கேம் சேஞ்சர்: ராஜமெளலி இயக்கத்தில் நடித்து முடித்த ராம்சரண் அடுத்து பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு அந்த படம் வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாம். உடனடியாக தனது 16வது படத்தை தொடங்கி விட்டார் ராம்சரண்.
இட்லி, வடை சர்ச்சை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அம்பானி வீட்டு ப்ரி வெட்டிங் நிகழ்ச்சியில் ராம்சரணை நாட்டுக் கூத்து பாடலுக்கு நடனமாட அழைக்கும் போது இட்லி வடை ராம்சரண் என அழைத்தது ராம்சரண் ரசிகர்களை கொந்தளிப்பில் ஆழ்த்தியது. இந்நிலையில், ராம்சரண் படத்தில் பாலிவுட் நடிகை ஜோடியாக நடிக்கப் போவதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை சற்றே ஆசுவாசப்படுத்தும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











