'மேல் நாட்டு மருமகளாக' இங்கீலிஷில் பாடி அசத்திய ஜெயலலிதா!
சென்னை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழ்த் திரையுலகில் திறமையான நடிகையாக மட்டுமின்றி மிகச் சிறந்த பாடகியாகவும் திகழ்ந்துள்ளார்.
தனது சிறுவயது முதலே ஆடல், பாடல் கலைகளில் திறமையானவராக விளங்கிய ஜெயலலிதாவிற்கு, தமிழ்த் திரையுலகம் கதாநாயகி அந்தஸ்தை வழங்கியது. தான் நடித்த படங்களில் தனது தேர்ந்த நடிப்பு மட்டுமின்றி, நடனத் திறமையையும் அரங்கேற்றினார்.
சுமார் 140க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா, சில படங்களில் பாடல்களையும் சொந்தக் குரலில் பாடியுள்ளார்.

அம்மா என்றால் அன்பு...
கே.வி.மகாதேவன் இசையில் அடிமைப்பெண் படத்தில் ஜெயலலிதா பாடிய அம்மா என்றால் அன்பு பாடல் பெரும் புகழ் பெற்றதை அடுத்து, அடுத்து வந்த தன் படங்களிலும் சில பாடல்களை அவர் பாடத் தொடங்கினார்.

வந்தாளே மகாலட்சுமி...
1973ம் ஆண்டில் வெளியான வந்தாளே மகாலட்சுமி படத்தில் ‘கண்களில் ஆயிரம்...' என்ற பாடலை டி.எம்.சவுந்திரராஜனுடன் இணைந்து பாடினார் ஜெயலலிதா.

சித்திர மண்டபத்தில்...
இதுவரை வாலியின் கைவண்ணத்தில் உருவான பாடல்களை மட்டுமே பாடி வந்த ஜெயலலிதா, முதன்முறையாக 1974ம் ஆண்டு கண்ணதாசனின் பாடலைப் பாடினார். வைரம் என்ற படத்தில் ‘இரு மாங்கனி போல்...' என்ற பாடலை எஸ்.பி.பி.யுடனும், அன்பை தேடி படத்தில் ‘சித்திர மண்டபத்தில்..' என்ற பாடலை டி.எம்.சவுந்தரராஜனுடனும் இணைந்து பாடினார்.

திருமாங்கல்யம்...
சூரியகாந்தி படத்தில் இரண்டு பாடல்களைப் பாடியது போலவே 1974ம் ஆண்டு வெளியான திருமாங்கல்யம் படத்திலும் இரண்டு பாடல்களை ஜெயலலிதா பாடியுள்ளார். இப்படத்தின் பாடல்களை கண்ணதாசன் எழுதியுள்ளார்.

பி.சுசிலாவுடன்...
திருமாங்கல்யம் எனத் தொடங்கும் பாடலை பி.சுசிலாவுடன் இணைந்தும், உலகம் ஒரு நாள் பிறந்தது என்ற பாடலை சோலோவாகவும் பாடினார் ஜெயலலிதா.

மெட்ராஸ் மெயில்...
அதனைத் தொடர்ந்து 1977ம் ஆண்டு வெளியான உன்னை சுற்றும் உலகம் படத்தில் வரும் மெட்ராஸ் மெயில் என்ற பாடலை எல்.ஆர்.ஈஸ்வரியுடன் இணைந்து பாடினார் ஜெயலலிதா.

ரிலீசாகவில்லை...
குன்னக்குடி விஸ்வநாதன் இசையில் உருவான ஒரு பெயரிடப் படாத படத்தில் ‘மாறி வரும் உலகினில்' என்ற பாடலைப் பாடினார் ஜெயலலிதா. ஆனால், அப்படம் கடைசி வரை வெளிவரவே யில்லை.

கணவன் மனைவி...
இது தவிர கடந்த 1976ம் ஆண்டு முத்துராமன் ஜோடியாக ஜெயலலிதா நடித்திருந்த ‘கணவன் மனைவி' படத்தில் ஆங்கிலப் பாடலின் சில வரிகளை ஜெயலலிதா பாடியுள்ளார்.

மேல்நாட்டு மருமகளாக
கணவன் மனைவி படத்தில் முத்துராமனின் மனைவியாக, மேல்நாட்டில் படித்து வளர்ந்த மாடர்ன் பெண்ணாக அசத்தியிருப்பார் ஜெயலலதா. அவரது பேச்சும், ஸ்டைலும்.. பின்னி எடுத்திருப்பார். இந்தப் படத்தில் மட்டுமல்லாமல் சூரியகாந்தி படத்திலும் கூட அவர் ஆங்கிலத்தில் பாடியிருப்பார்.


Click it and Unblock the Notifications











