ஜோதிகா அப்படி பேசியிருந்தால் என்ன தவறு?.. சமந்தா அளவுகூட சிம்ரன் இல்லை.. விளாசிய பிரபலம்
சென்னை: தமிழ் சினிமாவின் இடையழகி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்ரன். அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள். தற்போது தனது கரியரில் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் அவர்; சசிகுமாருடன் இப்போது டூரிஸ்ட் ஃபேமிலி என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.சூழல் இப்படி இருக்க அவர் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், 'என்னுடைய சக நடிகை ஒருவருக்கு உங்களை இந்த ரோலில் பார்ப்பதற்கு சர்ப்ரைஸாக இருந்தது' என்று மெசேஜ் செய்தேன். உடனே அந்த நடிகையோ, 'ஆண்ட்டி ரோலில் நடிப்பதைவிடவும் இந்த மாதிரி ரோலில் நடிக்கலாம்' என்று கூறியது அதிர்ச்சியை கொடுத்தது என கூறினார். சிம்ரனின் அப்படி பேசியது ஜோதிகாதான் என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.
பாலிவுட்டில் தனது ஹீரோயின் பயணத்தை ஆரம்பித்தவர் சிம்ரன். அதனைத் தொடர்ந்து தமிழில் அறிமுகமான அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி அவர் நடித்த அவள் வருவாளா, நட்புக்காக, கண்ணெதிரே தோன்றினாள், துள்ளாத மனமும் துள்ளும், வாலி என வரிசையாக தமிழ் படங்கள் ஹிட்டாகின. அதன் காரணமாக குறுகிய காலத்திலேயே அவர் கோலிவுட்டின் முன்னணி நடிகை என்ற நாற்காலியில் வந்து அமர்ந்தார். தொடர்ந்து வளர்ந்த ஹிரோக்கள், வளர்ந்துவரும் ஹீரோக்கள் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார் அவர்.
பெயர் எடுத்த சிம்ரன்: கிளாமர் ரோல், ஹோம்லி ரோல் என எது கொடுத்தாலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் அவர். சந்திரமுகி படத்தில்கூட ஜோதிகா கேரக்டரில் நடிக்க முதலில் சிம்ரனிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தியது படக்குழு. ஆனால் அந்த சமயத்தில் அவர் கர்ப்பமாக இருந்ததால் அதில் நடிக்க முடியவில்லை. இதற்கிடையே அவர் தனது பால்ய கால நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கும் அவர்; டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். படம் மே ஒன்றாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

சர்ச்சையை கிளப்பிய சிம்ரன்: இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் அவர். அப்போது பேசிய அவர், "சமீபத்தில் என்னுடைய சம காலத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு, உங்களை இந்த மாதிரியான ரோலில் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மெசேஜ் செய்தேன். அதற்கு அவரோ, ஆன்ட்டி ரோலில் நடிப்பதைவிடவும் இந்த மாதிரியான ரோலில் நடிக்கலாம் என பதிலளித்தார். அது எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது. டப்பா ரோலில் நடிப்பதைவிட ஆன்ட்டி ரோலில் நடிக்கலாம் என தெரிவித்திருந்தார்.
யார் அந்த நடிகை?: சிம்ரனின் இந்தப் பேச்சையடுத்து அவரிடம் அப்படி பேசிய நடிகை லைலாவா இல்லை ஜோதிகாவா என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் அவரிடம் பேசியது ஜோதிகாவாகத்தான் இருக்கும்; ஏனெனில் அவர்தான் டப்பா கார்ட்டெல் வெப் சீரிஸில் நடித்திருந்தார். அதனை குறிப்பிட்டுதான் டப்பா என்கிற வார்த்தையை சிம்ரன் பயன்படுத்தியிருக்கிறார் என கூறினார்கள். ஆனால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே அமைதியாக இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.

அந்தணன் பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "சிம்ரன் இந்த விஷயத்தில் உண்மையைத்தான் சொன்னாரா என்பதே இங்கே ஒரு கேள்விதான். அவர் அந்த மேடையில் சுவாரசியத்துக்காகக்கூட அப்படி சொல்லியிருக்கலாம். ஒருவேளை அப்படி ஒரு நடிகை சிம்ரனிடம் பேசியது உண்மைதான் என்றால் அந்த நடிகை லைலாவாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் லைலா பொதுவாக ஒரு படத்தை ரொம்பவே சீரியஸாக பார்ப்பார். அவர் தனது இரண்டாவது இன்னிங்ஸில்கூட வரும் படங்களில் நடித்துவிட்டு அமைதியாக சென்றுவிடுகிறார் என்பதுதான் உண்மை.
ஜோதிகாவாக இருக்க வாய்ப்பு உண்டு: ஆனால் ஜோதிகா அப்படி இல்லை. தன்னுடைய ரீ என்ட்ரியில் தான் நடிக்கும் படம் எப்படி இருக்க வேண்டும் என்று இந்த நிமிடம்வரை கணக்கு போட்டுக்கொண்டிருக்கிறார். அவர் தமிழில் ரீ என்ட்ரி ஆனபோதுகூட தன்னுடைய இமேஜை பூஸ்ட் அப் செய்யும் படமாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துதான் வந்தார். அவர் நினைத்தபடியே கோலிவுட்டில் அவருக்கான இமேஜும் இரண்டாவது இன்னிங்ஸில் உயர்ந்ததுதான். அப்படி அவர் தமிழில் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறார். அதனால் தன்னுடைய சமகாலத்தில் இருந்த நடிகை (சிம்ரன்) எதற்காக ஆன்ட்டி ரோலில் நடிக்க வேண்டும் என்று ஜோதிகா நினைத்திருக்கலாம். அதனை அவர் ஒரு அக்கறையாகக்கூட சொல்லியிருக்கலாம். அதை ஏன் சிம்ரன் பொறாமையாக பார்க்க வேண்டும்.

ஏங்க இதெல்லாம் ஒரு தப்பா?: ஏன் மா நீங்கதான் நல்லா நடிக்கிறீங்க. நல்ல ரோல் செய்யலாமே. எதற்காக வில்லி ரோல் செய்ய வேண்டும் என்று கேட்பது ஒரு தவறா?. ஒருவேளை ஜோதிகா அப்படி சொல்லியிருந்தால்கூட அது என்னவோ பெரிய தவ்று போல் சித்தரித்து அந்த மேடையில் சிம்ரன் கூறுகிறார். ஜோ அப்படி சொல்லியிருந்தால் கண்டிப்பாக சிம்ரன் மீது இருக்கும் அக்கறையால்தான் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். அதேபோல் சிம்ரனுக்கு மேடையில் பூடகமாக ஒருவரை விமர்சிக்கும் அளவுக்கெல்லாம் தெரியாது.
அவர்கள் சொன்னது பாசிட்டிவ்வான விஷயம்தான்: சிம்ரனிடம் அப்படி சொன்னது லைலாவோ,ஜோதிகாவோ யாராக இருந்தாலும் அவர்கள் சொன்னது பாசிட்டிவ்வான விஷயம்தான். அதை தவறாக பார்ப்பதற்கு எதுவுமே இல்லை. சிம்ரன் எப்படி தனியாக போராடி சினிமா வாய்ப்பு பெற்றாரோ. அதேபோல்தான் ஜோதிகாவும். ஜோதிகா ரீ என்ட்ரி கொடுத்தது வேண்டுமானால் சூர்யாவின் மனைவி என்ற பெயரில் கொடுத்திருக்கலாமே தவிர; அதற்கு முன்னர் அவரது பயணம் தனியாகத்தானே இருந்தது. பொதுவாக சினிமாவில் யாராக இருந்தாலும் பெரிய போராட்டத்தை சந்தித்துதான் ஆக வேண்டும்.
இவ்வளவு டென்ஷன் தேவையில்லை: இந்த விஷயத்தில் சிம்ரன் இவ்வளவு டென்ஷனே ஆக வேண்டாம். நம் மீது இருக்கும் அக்கறையில் ஒருவர் இப்படி சொல்கிறார் என்றுதான் சிம்ரன் எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.இவ்வளவு நெகட்டிவ்வாக எடுத்திருக்க வேண்டாம். சிம்ரனின் இடத்தை யாராலும் ரீ ப்ளேஸ் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். சிம்ரன் அப்படி ஒன்றும் நல்ல நடிகை கிடையாது. சமந்தா மாதிரிகூட சிம்ரன் நடிக்கவில்லை.ஆனால் ஜோதிகாவெல்லாம் மொழி படத்தில் எல்லாம் அருமையாக நடித்திருந்தார். சிம்ரனுக்கு அப்படி ஒன்றும் இல்லை. அவர் ஒரு காலத்தில் கிளாமர் டாலாக இருந்தார். அது பெரிய தகுதியெல்லாம் கிடையாத" என்றார்.அந்தணனின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications