ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக நடிக்கிறார் ஜோதிகா!
சென்னை: ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கிறார் சூர்யாவின் மனைவியும், நடிகையுமான ஜோதிகா.
தொன்னூறுகளின் இறுதியில் தமிழில் வாலி படத்தில் அறிமுகமானவர் ஜோதிகா. முதல் முறையாக பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுடன் நடித்தார்.
தொடர்ந்து குஷி, தெனாலி, முகவரி, திருமலை, மன்மதன், தூள், சந்திரமுகி, மொழி என தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார்.

சூர்யாவுடன்
பூவெல்லாம் கேட்டுப்பார் தவிர, சூர்யாவுடன் காக்க காக்க, பேரழகன், மாயாவி, உயிரிலே கலந்தது, சில்லுன்னு ஒரு காதல், ஜூன் ஆர் என ஏழு படங்களில் நடித்துள்ளார் ஜோதிகா.
அவர் நடித்து கடைசியாக வந்த படம் கவுதம் மேனன் இயக்கிய பச்சைக்கிளி முத்துச்சரம். 2007-ல் இந்தப் படம் வந்தது.

திருமணம்
கடந்த 2006-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவைக் காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் இவர் நடிப்புலகிலிருந்து ஒதுங்கியிருந்தார். இரு குழந்தைகளைப் பெற்று அவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.

விளம்பரப் படங்கள்
இவரை மீண்டும் நடிக்கவைக்க பலரும் முயற்சி செய்தபோதும் இவர் எந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை. கணவர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் எடுத்த குறும்படம், சில விளம்பரப் படங்களில் மட்டும் நடித்தார் ஜோதிகா.

ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு..
ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு தற்போது மலையாளப் படமான 'ஹவ் ஓல்ட் ஆர் யூ' வின் தமிழ்த் திரையாக்கத்தில் ஜோதிகா நடிக்கவிருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சு வாரியர் நடித்த படம்
மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் நாயகியாக நடித்து பெரும் வெற்றி பெற்ற படம்தான் இந்த ஹவ் ஓல்ட் ஆர் யூ. மஞ்சு வாரியர் நடித்த வேடத்தில்தான் இப்போது ஜோதிகா நடிக்கிறார். 15 ஆண்டுகால இடைவேளைக்குப்பின் மஞ்சு வாரியர் தன் திரையுலகப் பயணத்தை மீண்டும் தொடங்கிய படம் அது. 7 ஆண்டுகள் கழித்து ஜோதிகா தன் திரைப் பயணத்தை அந்தப் படத்திலிருந்தே தொடங்குவது குறிப்பிடத்தக்கது.

ரோஷன் ஆன்ட்ரூஸ்
மலையாளப் படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூசே தமிழ்ப் படத்தினை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ளார். பல திரைப்பட வாய்ப்புகள் ஜோதிகாவிற்கு கிடைத்தபோதும் அவர் எதையும் ஏற்கவில்லை. ஆனால் பெண்கள் உரிமை பற்றிய சமூக செய்தியைக் கொண்டுள்ள இந்தப் படத்தின் திரைக்கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால் சம்மதம் தெரிவித்தாராம்.

சூர்யாவே தயாரிக்கிறார்
இந்தப் படத்தை ஜோதிகாவின் கணவர் சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்வதில் மும்முரமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











