சாய் பல்லவி என் மூச்சையே நிறுத்திட்டா.. ஜெய்பீம் படத்துக்குப் பிறகு அமரன் தான்.. ஜோதிகா பாராட்டு!
சென்னை: இந்த ஆண்டு வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை மலையாள சினிமா பிரபலங்களை தாண்டி பல தமிழ் பிரபலங்களும் கொண்டாடினர். அதன் பின்னர் தமிழிலும் வாழை, லப்பர் பந்து உள்ளிட்ட தரமான படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்டாக தீபாவளிக்கு சரவெடியாக வெளியான அமரன் திரைப்படத்தை இந்தியளவில் பலரும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி தெலுங்கு ரசிகர்களும் இந்தி ரசிகர்களும் அமரன் படத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். நடிகர் சிவகுமார் அவரது மகன் சூர்யா மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா என மூவரும் அமரன் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்திய நிலையில், தனியாக ஜோதிகா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜெய்பீம் படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு தரமான கிளாசிக் படமாக அமரன் படம் வெளியாகி இருக்கிறது என்றும் இந்த வைரத்தை ரசிகர்கள் மிஸ் செய்து விடக் கூடாது என்றும் ஜோதிகா போஸ்ட் போட்டுள்ளார்.
குடும்பத்துடன் வாழ்த்திய சூர்யா: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், நட்டி நட்ராஜ், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது. அந்த படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்காத நடிகை ஜோதிகா அமரன் படத்தை குடும்பத்துடன் பாராட்ட வேண்டும் என சென்னைக்கு கிளம்பி வந்திருக்கிறார். மாமனார் சிவகுமார் மற்றும் கணவர் சூர்யாவுடன் இணைந்து அமரன் படத்தின் இயக்குநர் மற்றும் சிவகார்த்திகேயனை சந்தித்து வாழ்த்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளன.

ஜெய்பீம் படத்துக்குப் பிறகு: ஜெய்பீம் படத்துக்குப் பிறகு ஜெய்பீம் படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கிய வேட்டையன் படத்தை கூட ஜோதிகா இந்தளவுக்கு பாராட்டவில்லை. ஜெய்பீம் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் கிளாசிக் படமாக அமரன் படம் வந்துள்ளது என அவர் தனது இன்ஸ்டாகிராமில் மனமார போஸ்ட் ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். மெய்யழகன் படத்தை கூட ஜோதிகா குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி என்னவொரு நடிகை: சிவகார்த்திகேயன் இந்தளவுக்கு மெனக்கெட்டு நடிப்பார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் ஒரு வைரத்தை உருவாக்கி இருக்கீங்க, சாய் பல்லவி என்னவொரு நடிகை. அந்த கடைசி 10 நிமிடக் காட்சிகளில் என் இதயத்தையும் மூச்சையையும் அப்படியே நிறுத்திட்டீங்க என படக்குழு மொத்தத்தையும் பாராட்டிய ஜோதிகா. மேஜர் முகுந்த் நம்முடனே இருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பார் என்றும் ரெபேக்கா வர்கீஸின் தியாகத்திற்கு ஈடு இணையே இல்லை என்றும் பாராட்டியுள்ளார். மேலும், இந்த வைரத்தை ரசிகர்கள் மிஸ் செய்துவிடக் கூடாது என்றும் ஜோதிகா படத்தை பார்க்காதவர்கள் சீக்கிரம் தியேட்டருக்குச் சென்று பார்த்துவிடுங்கள் எனக் கூறியுள்ளார்.

அடுத்து கங்குவா: அமரன் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி வரும் நிலையில், அடுத்து சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் அடிப்பது உறுதி என ரசிகர்கள் பலரும் ஜோதிகாவின் போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். கூடிய சீக்கிரமே ராஜ்குமார் பெரியசாமி 2டி நிறுவனத்தில் படம் பண்ணவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











