Jyothika: தென்னிந்திய சினிமா ஆணாதிக்க சினிமா.. பாலிவுட்டுக்கு போனதும் ஜோதிகா ஓபன்..!
மும்பை: நடிகை ஜோதிகா இப்போது முழுவதுமாக பாலிவுட் கதாநாயகியாக மாறிவிட்டார். பாலிவுட் கதாநாயகியாக மாறிய பின்னர் இவருக்கு வெற்றிகள் தொடர்ந்து குவிந்து வருவதால் அடுத்தடுத்து படங்கள் வெப் சீரிஸ்கள் என அனைத்திலும் கமிட் ஆகி வருகிறார். இப்படியான நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தென்னிந்திய சினிமா குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
வாலி படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தமிழில் தொடங்கிய ஜோதிகா தற்போது பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு உள்ளார். சென்னையில் இருந்து முழுவதுமாக வெளியேறி மும்பையில் குடும்பமாக செட்டில் ஆகியுள்ளார். அவர்கள் மும்பைக்கு போவதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது இவர்களின் குழந்தைகள் தியா மற்றும் தேவ் ஆகியோரது உயர்கல்விக்காக சென்றதாக கூறப்படுகிறது. மேலும், ஜோதிகாவுக்கு அவரது அம்மாவுடன் இருக்க வேண்டும் எனத் தோன்றியதால் அங்கு சென்றுள்ளார்கள் என கூறப்படுகிறது.

மும்பைக்குச் சென்ற பின்னர் சூர்யாவும் பாலிவுட் படங்களில் கமிட் ஆகி நடிக்க முயற்சிகள் செய்து வருகிறார் என கூறப்படுகிறது. அதனால்தான் ஹிந்தி திணிப்பு குறித்து பேசும் படமான புறநானூறு (இப்போது பராசக்தி என்ற பெயரில் உருவாகி வருகிறது) படத்தில் இருந்து விலகினார் எனவும் திரைத்துறையில் கிசுகிசுக்கப்பட்டது. சூர்யாவுக்கு வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ, ஜோதிகா அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்களும் சீரிஸ்களும் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.
ஜோதிகா: இப்படியான நிலையில், நடிகை ஜோதிகா சமீபத்தில் அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமா குறித்து பேசியுள்ளார். அதாவது, " தென்னிந்திய சினிமா ஒரு ஆணாதிக்க சினிமா உலகமாக உள்ளது. பாலிவுட் சினிமாவோடு ஒப்பிடும்போது தென்னிந்திய சினிமாவில் ஆணாதிக்கம் அதிகம். அங்கு எழுதப்படும் பெரும்பான்மையான கதைகள் ஆண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு எழுதப்படும். பெண் கதாபாத்திரங்கள் வெறுமனே கதாநாயகனுக்கு ஜோடியாக மட்டும் எழுதப்படும். கதாநாயகிகள் கதாநாயகர்களுடன் நடனம் ஆடுவதும், கிறுக்குத்தனமாக ஏதாவது செய்வதுமாக மட்டுமே இருக்கும். இப்போதும் அவை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

புரிதல்: நானுமே அப்படி நடித்திருக்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் இதனை நான் புரிந்து கொண்டு அதில் இருந்து என்னை மாற்றி நடித்துக் கொண்டு உள்ளேன். எனக்கு இந்த புரிதல் வந்த பின்னர், நான் தேர்வு செய்யும் படங்களும் கதைகளுமே என்னை இங்கு கொண்டு வந்து இப்போது நிறுத்தியுள்ளது. எனது 28 வது வயதில் இருந்தே எனக்கு இந்த பார்வை இருந்ததால், அதன் பின்னர் நான், வெகு சில கதைகளில் மட்டுமே நடிக்க ஒப்புக் கொண்டேன்" இவ்வாறு ஜோதிகா பேசியுள்ளார்.

ஆணாதிக்கம்: அவரது இந்த பேச்சு தமிழ் சினிமா வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் உள்ளவர்கள் மத்தியிலும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் ரசிகர்கள் பலரும் ஜோதிகாவின் கருத்து சரி எனவும் சிலர் ஜோதிகாவின் கருத்தில் இருந்து மாறுபட்ட கருத்தை தெரிவித்து வருகிறார்கள். ஜோதிகாவின் இந்த பேச்சை வன்மமாக கருதாமல், அதில் இருக்கும் உண்மைத் தன்மையை யோசித்துப் பார்த்தால், தமிழ் சினிமா உலகம் எந்த அளவுக்கு ஆணாதிக்க சினிமாவாக உள்ளது என்பது புரிய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications











