‘காதல்’ சந்தியாவை நினைவிருக்கா?.. சிம்பு அப்படி செஞ்சது இப்போதும் வருத்தமாம்.. ஓபனா சொல்லிட்டாங்க
சென்னை: பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான காதல் படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சந்தியா. முதல் படத்திலேயே அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்திய அவர்; தமிழில் தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நடித்த அவர் இப்போது பெரும்பாலும் நடிப்பதில்லை. இந்நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
கேரளாவை சேந்த சந்தியா காதல் படத்தில் நடிகையாக அறிமுகமானவர். பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படம் வெளியான சமயத்தில் பெரிய சென்ஷேஷனல் ஆனது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்துதான் அப்படத்தை இயக்கியிருந்தார் பாலாஜி. காதல் படத்தில் நடித்தபோது சந்தியாவுக்கு 15 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்க்து. அந்த சிறு வயதிலேயே அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளியிருந்தார்.
கொடுமையான க்ளைமேக்ஸ்: அதுவும் படத்தின் ப்ரீ க்ளைமேக்ஸும், க்ளைமேக்ஸும் ரொம்பவே கனமானது. ஆனால் அந்த சீன்களில் சந்தியாவின் நடிப்பு மிரள வைத்தது. அவ்வளவு அசால்ட்டாக அந்தக் காட்சிகளில் நடித்திருந்தார். அப்போதே பலரும் சந்தியாவுக்கு வலுவான எதிர்காலம் இருப்பதாக ஆரூடம் கூறினார்கள். அதற்கேற்றபடி காதல் படத்தை முடித்தவுடனேயே மலையாள பட வாய்ப்பும் கிடைத்தது.

தமிழில் பிஸி: அது ஒருபக்கம் இருக்க தமிழில் வாய்ப்புகள் வரிசையாக வர ஆரம்பித்தன. அப்படி ஜீவாவுடன் நடித்த டிஷ்யூம் படத்திலும் சிறந்த நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார். அதற்காக அவர் தமிழ்நாடு அரசின் விருதையும் பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது. டிஷ்யூமை முடித்துவிட்டு வல்லவன் படத்தில் முக்கியமான கேரக்டரை ஏற்றிருந்தார்.தொடர்ந்து தூண்டில், கூடல் நகர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் கன்னடத்த்லும் தடம் பதித்திருக்கிறார்.
இப்போது சின்னத்திரையில்: ஒருகட்டத்தில் வெள்ளித்திரையிலிருந்து ஒதுங்கி சின்னத்திரையில் ஜொலித்துவருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடித்த அவர்; இப்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் மனசெல்லாம் சீரியலில் நடித்துவருகிறார். இந்நிலையில் தனது திரையுலக அனுபவம் குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார் சந்தியா.
சந்தியாவின் பேட்டி: அவர் அளித்த பேட்டியில், "காதல் படத்தில் நடித்தபோது எனக்கு 15 வயதுதான் ஆனது. பாலாஜி சக்திவேல் எனக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுத்து நடிக்க வைத்தார். பரத்தும் பல விஷயங்களை சொல்லிக்கொடுத்தார். படத்தின் க்ளைமேக்ஸில் நான் நடித்ததை பார்த்து ஒட்டுமொத்த யூனிட்டுமே கைதட்டி பாராட்டியது. அதுமட்டுமின்றி படம் ரிலீஸுக்கு பிறகு ஷங்கர் மட்டுமில்லாமல் அவரது மனைவியும் வீட்டுக்கு அழைத்து பாராட்டினார்.
சிம்பு மீது வருத்தம்: தமிழில் இரண்டாவதாக நடித்த டிஷ்யூம் படமும் எனக்கு நல்ல பெயரைத்தான் பெற்றுக்கொடுத்தது. அந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் வல்லவன் படத்தில் கமிட்டானேன். அந்தப் படத்தில் என்னிடம் சொன்னது மாதிரி என்னை பயன்படுத்தியிருக்கலாம். அப்படி பயன்படுத்தவில்லையே என்ற வருத்தம் இப்போதும் எனக்கு இருக்கத்தான் செய்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











