30 ஆம் தேதி திருமணம்.. அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகை காஜல் அகர்வால்.. திரையுலகினர் வாழ்த்து!
சென்னை: தொழிலதிபருடன் நடிகை காஜல் அகர்வாலுக்கு வரும் 30 ஆம் தேதி திருமணம் நடக்கிறது. இதை அவர் அதிகாரபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை காஜல் அகர்வால், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.
தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, மாரி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

ஹே சினாமிகா
இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தியில், மும்பை சாகா என்ற படத்தில் நடித்துள்ளார். நடன இயக்குனர் பிருந்தா இயக்கும் ஹே சினாமிகா படத்திலும் காஜல் நடிக்கிறார். இதில் துல்கர் சல்மான் ஹீரோ. இன்னொரு ஹீரோயினாக அதிதி ராவ் ஹைதாரி நடிக்கிறார்.

சிரஞ்சீவியின் ஆச்சார்யா
இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் இருந்து த்ரிஷா விலகியதை அடுத்து, அந்த படத்திலும் காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி உள்ளார். காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வாலுக்கு 2013-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவரும் தமிழ், தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ளார்.

பெற்றோர் முடிவு
இவர் காதல் திருமணம் முடிந்து மும்பையில் செட்டிலாகிவிட்ட நிலையில் காஜல் அகர்வாலும் திருமணம் செய்துகொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர், படங்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது அவருக்கு 35 வயது ஆகிறது. திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

தொழிலதிபர் கவுதம்
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலுக்கு, தொழிலதிபர் கவுதம் கிட்சிலுவுடன் திருமணம் முடிவாகிவிட்டதாக பரபரப்பு தகவல் வெளியானது. இரு வீட்டு குடும்பத்தினரும் பேசி திருமண தேதியை முடிவு செய்துவிட்டதாகவும் விரைவில் அதை அறிவிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

மகிழ்ச்சி அறிவிப்பு
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தனது சமூக வலைதளப்பக்கத்தில் திருமணத்தை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான், கவுதம் கிட்சிலுவை திருமணம் செய்துகொள்ள இருக்கும் தகவலை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் திருமணம் வரும் 30 ஆம் தேதி மும்பையில் நடக்க இருக்கிறது.

கொரோனா தொற்று
இரு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ளும் எளிமையான விழாவாக இது இருக்கும். இந்த கொரோனா தொற்று காலம் எங்கள் மகிழ்ச்சியில் மெல்லிய வெளிச்சத்தை பரப்பி இருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்க்கையை தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நீங்கள் எங்களை வாழ்த்துவீர்கள் என்பதை அறிவோம்.

முடிவில்லா ஆதரவு
பல வருடங்களாக நீங்க கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. எங்கள் புதிய பயணத்துக்கு உங்கள் ஆசிர்வாதங்களை நாங்கள் தேடுகிறோம். புதிய தேவையுடனும் அர்த்தத்துடன் நான் தொடர்ந்து என் ரசிகர்களை மகிழ்விப்பேன். உங்கள் முடிவில்லா ஆதரவுக்கு நன்றி. இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











