அப்பாடா... தோல்வி நாயகி லேபிளிலிருந்து தப்பிச்சேன்! - நிம்மதி பெருமூச்சு விடும் காஜல்
காஜல் அகர்வாலுக்கு இப்போதுதான் பெரும் நிம்மதி கிடைத்திருக்கிறது. அது.. தோல்வி நாயகி என்ற முத்திரையிலிருந்து தப்பித்து வந்தது. துப்பாக்கி வந்த நேரம்!

பேரரசு தந்த சோதனை
காஜலின் முதல் படம் பொம்மலாட்டம். பாரதி ராஜா அறிமுகம் என்ற பெருமையோடு வர நினைத்தவருக்கு, பெரும் சோதனை கொடுத்தவர் பேரரசு. அவரது பழனி படத்திலும் அப்போது நடித்துக் கொண்டிருந்தார் காஜல். பொம்மலாட்டம் லேட்டாகிக் கொண்டிருந்ததால், பழனியை ரிலீஸ் செய்துவிட்டார்கள். படம் அட்டர்ப்ளாப்!

பொம்மலாட்டம்...
அடுத்து வந்தது பொம்மலாட்டம். அதில் காஜலுக்கு சின்ன ரோல்தான். நானா படேகர், அர்ஜூன் ஆகியோரின் நடிப்புப் புயலில், கல்லூரி மாணவி வேடத்தில் வந்த காஜல் காணாமல் போய்விட்டார். பாராட்டுக்களைக் குவித்தாலும் வசூலைக் குவிக்கவில்லை அந்தப் படம்.

பை சொன்ன கோலிவுட்
அத்தோடு காஜலுக்கு பை சொல்லிவிட்டது கோலிவுட். வேறு படங்கள் இல்லாததால் ஹோட்டலைக் காலி செய்துவிட்டு ஹைதராபாத் பக்கம் ஒதுங்கினார் அம்மணி. அங்கே ஒன்றிரண்டு படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது, மகதீரா வாய்ப்பு வந்தது.

மகதீரா தந்த வெற்றி
மகதீராவின் தாறுமாறான வெற்றி அவரை தெலுங்கின் நம்பர் ஒன் நாயகியாக்கிவிட்டது. இருந்தாலும் தன்னை தோல்வி நாயகி என்ற முத்திரை குத்தி துரத்திய தமிழ் சினி்மாவை ஜெயிக்காமல் விடப் போவதில்லை என்ற நோக்கத்தோடு காத்திருந்தார் காஜல். அதற்கேற்ற மாதிரி, மகதீரா, மாவீரனாகி தமிழில் நல்ல வசூலைத் தந்தது. காஜலுக்கும் மீண்டும் தமிழில் வாய்ப்பு வந்தது.

கிலி பிடிக்க வைத்த மாற்றான்
அப்படி வந்த முதல் படம் நான் மகான் அல்ல. அந்தப் படம் கொஞ்சம் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. ஆனால் அடுத்து சூர்யாவுடன் அவர் நடித்த மாற்றான் பெரும் தோல்வியைத் தழுவ, மீண்டும் கோடம்பாக்கத்திலிருந்து பேக் பண்ண வேண்டி வருமோ என்ற கவலை பற்றிக் கொண்டது காஜலுக்கு.

ஆபத்பாந்தவன் துப்பாக்கி
இந்த நேரத்தில்தான் ஆபத்பாந்தவனாக வந்தது துப்பாக்கி. ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக காஜல் நடித்திருந்தார். ஆக்ஷன் படம்தான் என்றாலும் காஜலுக்கும் ஓரளவு முக்கியத்துவம் தந்திருந்தார்கள்.
இந்தப் படத்தின் வெற்றி, இன்னும் இரண்டு தோல்விகளைத் தாங்கும் என்பதால், தமிழின் முன்னணி நடிகைகள் ரேஸில் இரண்டாம் இடத்தைப் பிடித்து, மகிழ்ச்சியோடு அட்வான்ஸ் வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கிறார் காஜல்!


Click it and Unblock the Notifications











