கனகா-தந்தை திடீர் சமரசம்

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகையாக ஒரு காலத்தில் விளங்கியவர் தேவிகா. இவர் கடந்த 2002ம் ஆண்டு இறந்து விட்டார். இவரது கணவர் தேவதாஸ். இவர்களின் மகள்தான் நடிகை கனகா.
தேவிகா உயிருடன் இருந்தபோதே அவருக்கும், தேவதாஸுக்கும் இடையே பேச்சுவார்த்தை கிடையாது. இருவரும் நீண்ட காலத்திற்கு முன்பே பிரிந்து விட்டனர். கனகாவும், தனது தந்தையை கண்டுகொள்ளவில்லை.
பிரிந்து வாழ்ந்து வந்த தேவதாஸ், மதுரை பக்கம் வசித்து வருவதாக கூறப்பட்டது. அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டதாகவும் கூறப்பட்டது.
இந் நிலையில் மரணமடைவதற்கு முன்பு தனக்குச் சொந்தமான சென்னை ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் மயிலாப்பூர் வீடுகளை மகள் கனகாவுக்கு எழுதி வைத்தார் தேவிகா. அதேபோல, நகைககளையும் அவருக்கே எழுதி வைத்தார்.
தாயார் இறந்த பின்னர் நடிப்புக்கு முழுக்குப் போட்டு விட்டார் கனகா. மேலும், தனது தாயாரின் வீடுகளை விற்கவும் அவர் முயற்சித்தார். இதை அறிந்த தேவதாஸ், கடந்த 2005ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழககு தொடர்ந்தார்.
அதில், தேவிகா வீடு வாங்கியபோது நானும் பணம் கொடுத்தேன். எனது பணத்தால்தான் தேவிகாவால் வீடு வாங்க முடிந்தது. எனவே அந்த சொத்தில் எனக்கும் பங்கு உண்டு. எனவே என்னைக் கேட்காமல் கனகா வீடு விற்க கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந் நிலையில் கனகாவும், தேவதாஸும் சமரசமாகப் போக முடிவு செய்துள்ளனர்.
நேற்று (ஜனவரி 3) இந்த வழக்கில் வாய்தா வந்தது. அப்போது கோர்ட்டுக்கு வந்திருந்த கனகாவும், தேவதாஸும் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் தாங்கள் சமரசமாக போக முடிவு செய்திருப்பதாக நீதிபதியிடம் தெரிவித்தனர்.
இதை நீதிபதி ஏற்றுக் கொண்டார். விரைவில் இந்த வழக்கு பைசல் ஆகி விடும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











