நடிகை கங்கனாவுக்கு பத்மஶ்ரீ... மெகா கேக் வெட்டி சென்னையில் கொண்டாடிய 'தலைவி' டீம்
சென்னை: பத்மஶ்ரீ விருதுபெற்ற நடிகை கங்கனா ரணவத் அதை, சென்னையில் நடந்த தலைவி படப்பிடிப்பில் கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இந்தி நடிகை கங்கனா ரனவத், தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம் தூம் படத்தில் நடித்திருந்தார்.
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி'யில் நடித்து வருகிறார். இதை விஜய் இயக்குகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் நடந்து வருகிறது.

3 தேசிய விருதுகள்
சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே, தனு வெட்ஸ் மனு, ஃபேஷன், குயின் ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று தேசிய விருதுகளை பெற்றவர் கங்கனா. சமீபத்தில் இவர் நடித்த பங்கா என்ற இந்திப் படம் ரிலீஸ் ஆகியுள்ளது. இதை தனுஷ் தயாரிப்பில் அமலா பால் நடித்த, அம்மா கணக்கு படத்தை இயக்கிய அஸ்வினி ஐயர் இயக்கியுள்ளார்.

பத்ம விருதுகள்
ஜெஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய இந்திய பிரபலங்களை கவுரவிக்கும் விதமாக பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. பாலிவுட் திரை பிரபலங்களான கங்கனா ரனாவத், கரண் ஜோஹர், ஏக்தா கபூர் மற்றும் பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன.

பெண்களுக்கு
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய, நடிகை கங்கனா, தான் கவுரவிக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை அங்கீகரித்த தாய் நாட்டிற்கு நன்றி என்றும் தெரிவித்தார். மேலும், அனைத்து பெண்களுக்கும், ஒவ்வொரு மகளுக்கும், ஒவ்வொரு தாய்க்கும் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண்களின் கனவுகளுக்கும் இந்த விருதை சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
Recommended Video
சென்னையில்
இந்நிலையில், பத்மஸ்ரீ விருது பெற்றதை அடுத்து, நடிகை கங்கனா தலைவி படப்பிடிப்பில் கொண்டாடியுள்ளார். தலைவி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. நேற்று நடந்த படப்பிடிப்பின்போது பெரிய கேக் கொண்டு வரப்பட்டது. அதை வெட்டி கங்கனா கொண்டாடினார். இயக்குனர் விஜய் உட்பட படக்குழுவினர் இதில் கலந்துகொண்டனர்.


Click it and Unblock the Notifications











