மீண்டும் அரசியலுக்கு வருவேன்... நடிகை பூஜாகாந்தி பேச்சால் கன்னட அரசியலில் பரபரப்பு
பெங்களூர்: சினிமா வேலைகளில் கொஞ்சம் பிசியாக இருந்ததாகவும், விரைவில் மீண்டும் அரசியலுக்கு வருவேன் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார் நடிகை பூஜாகாந்தி.
தமிழ் மற்றும் கன்னடத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகை பூஜாகாந்தி. கன்னடத்தில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த பூஜாகாந்தி, திடீரென அரசியலில் குதித்தார். முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி முன்னிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இணைந்தார்.
தீவிர அரசியலில் இறங்கிய பூஜாகாந்தி ஜனதாதளம் (எஸ்) கட்சியிலிருந்து விலகி, ஹாவேரியில் நடைபெற்ற கர்நாடக ஜனதா கட்சி தொடக்க விழாவில் கலந்து கொண்டு எடியூரப்பா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
பின்னர் அக்கட்சியிலிருந்தும் வெளியேறிய பூஜாகாந்தி, பி.எஸ்.ஆர். காங்கிரஸ் ஸ்ரீராமுலு முன்னிலையில் பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கடந்தாண்டு நடந்த கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெறும் 1,815 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.
பின்னர் சினிமா பக்கம் தனது கவனத்தைத் திருப்பிய பூஜாகாந்தி, தற்போது மீண்டும் அரசியலில் இறங்குவேன் எனக் கூறி கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை பூஜா காந்தி பாகல்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தோல்வி...
கடந்த சட்டசபை தேர்தலில், பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன்.

அபினேத்ரி பட வேலைகள்...
பின், அபினேத்ரி திரைப்படத்தை நானே இயக்கி, நடித்து கொண்டிருந்ததால், அரசியலில் ஈடுபட முடியவில்லை.

பெண்கள் பிரச்சினைகள்...
ராய்ச்சூர் மாவட்ட பெண்கள், தங்களின் பிரச்னைகளை என்னிடம் கூறியபோது, என்னால் முடிந்தவரை தீர்த்து வைத்தேன். மக்களுடன், நான் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன்.

மீண்டும் வருவேன்...
விரைவில் மீண்டும் அரசியலில் இறங்குவேன். எந்த கட்சி என்பது பற்றி விரைவில் முடிவை அறிவிப்பேன்.

வழிகாட்டி இல்லை...
அரசியலில் எனக்கு சரியான வழிகாட்டி இல்லாததால், சற்று கடினமாக உள்ளது''என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











