நான் கடவுளில் கார்த்திகா!
பாலாவின் நான் கடவுள் பட நாயகி ஒரு வழியாக இறுதி செய்யப்பட்டு விட்டார். தூத்துக்குடி, பிறகு படங்களின் நாயகி கார்த்திகாதான் அந்த அதிர்ஷ்டக்கார நாயகி.
பாலா இயக்கத்தில் அறிவிக்கப்பட்ட நான் கடவுள் ஆரம்பத்திலிருந்தே பல குழப்பங்களில் சிக்கி வளர்ந்துவருகிறது. முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் மாற்றப்பட்டு ஆர்யா நாயகனானார்.பிறகு படப்பிடிப்பு தொடங்கி நடந்து வந்தது. ஒரு ஷெட்யூல் முடிந்த நிலையில் ஹீரோயின் பாவனா படத்தில் இல்லை என்று பேச்சு கிளம்பியது. பாவனாவிடம் வாங்கிய கால்ஷீட்டை முழுமையாக பயன்படுத்தாததால் அது காலாவதியாகி விட்டது.
பாவானாவின் நடிப்பில் பாலாவுக்கு திருப்தி வரவில்லை. இதனால் புதிய ஹீரோயினைத் தேடும் பணியில் பாலா மும்முரமாக இறங்கினார். கருப்பசாமி குத்தகைதாரர் பட நாயகி மீனாட்சி, மலையாள நடிகை பார்வதி மெல்டன் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் அவர்களிடமும் பாலா திருப்தி கொள்ளவில்லை.
இந்த நிலையில் கார்த்திகாவை தனது படத்தின் நாயகியாக பாலா இறுதி செய்துள்ளார். தூத்துக்குடி படம் மூலம் அட என்று ஆச்சரியமான அறிமுகத்தைக் கொடுத்தவர் கார்த்திகா.
அவர் ஆடிப் பாடிய கருவாப்பையா பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானதால், கார்த்திகாவும் பிரபலமானார். தொடர்ந்து வந்த பிறகு, சறுக்கினாலும் கூட கார்த்திகாவின் புகழ் குறையவில்லை. பாண்டியராஜன் மகன் பிருத்விக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கார்த்திகா.
இந்த நிலையில்தான் கார்த்திகாவை தனது நான் கடவுள் படத்தின் நாயகியாக்கியுள்ளார் பாலா. நான் கடவுள் படத்தில் நடிக்க ரெடியா என்று பாலா கேட்டபோது, கால்ஷீட் டைரியை அவரிடமே கொடுத்து உங்களுக்குத் தேவையான நாட்களை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சந்தோஷமாக கூறி விட்டாராம் கார்த்திகா.
படப்பிடிப்பு ஜூலை 25ம் தேதி தேனியில் மீண்டும் தொடங்குகிறதாம்.


Click it and Unblock the Notifications











