அயோத்தி ராமர் கோயில் திறப்பு.. ”காலு மேல கால போடு ராவண குலமே”ன்னு பாடிய கீர்த்தி பாண்டியன்!
சென்னை: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்ற அதே நேரத்தில் சென்னையில் பா. ரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி நடித்து ஜெயக்குமார் இயக்கிய ப்ளூ ஸ்டார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. மேடை ஏறி பேசிய கீர்த்தி பாண்டியன் எல்லா படத்துலயும் அரசியல் இருக்கு இந்த படத்திலேயும் அரசியல் இருக்கு என பேசினார்.
நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் கோகுல் இயக்கத்தில் வெளியான அன்பிற்கினியாள் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இந்த வாரம் அவர் நடிப்பில் வெளியாக உள்ள ப்ளூ ஸ்டார் திரைப்படம் கோகுல் இயக்கத்தில் உருவாகி உள்ள சிங்கப்பூர் சலூன் படத்துக்கு போட்டியாக வெளியாகிறது.

பா. ரஞ்சித் பேச்சு: "ரொம்ப தீவிரமான காலத்தை நோக்கி இந்தியா நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் எவ்வளவு மோசமான நிலையில் இந்தியாவில் நாம் இருக்கப் போகிறோம் என்ற பயம் நமக்கு வருகிறது. இன்று வீட்டில் தீபம் ஏற்றவில்லை என்றால் தீவிரவாதிகளாக மாற்றிவிடுவார்கள்" என ராமர் கோயில் திறப்பு விழா குறித்து விமர்சித்து பா. ரஞ்சித் பேசினார்.
ரஜினிகாந்த் மீது விமர்சனம்: ரஜினிகாந்தின் கபாலி, காலா படங்களை இயக்கி முன்னணி இயக்குநராக மாறிய பா. ரஞ்சித், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்றது குறித்து தனக்கு விமர்சனம் உள்ளது என்றும் ராமர் கோயிலுக்கு செல்வது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், 500 ஆண்டுகால போராட்டம் என அவர் பேசியதில் எனக்கு விமர்சனம் உள்ளது என பேசியுள்ளார்.

காலு மேல காலு போடு ராவண குலமே: அருண் பாண்டியனின் மகளும் அசோக் செல்வனின் மனைவியுமான கீர்த்தி பாண்டியன் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்துள்ள நிலையில், அரசியல் பற்றி ஏன் பேசக் கூடாது என்றும் அனைத்து படங்களிலும் அரசியல் உள்ளது. பா. ரஞ்சித் அண்ணா படத்தில் உள்ள அரசியல் சமூக கருத்துக்களை கொண்டது எனக் கூறினார். மேலும், இன்று மிகவும் முக்கியமான நாள், இந்த நாளில் ப்ளூ ஸ்டார் இசை வெளியீட்டு விழா நடைபெறுவது சிறப்பான ஒரு விஷயம். அறிவு வரிகளில் வெளியான "காலுமேல கால போடு ராவண குலமே.. மேல ஏறும் காலமாச்சு ஏறியாகணுமே" என பாடல் வரிகளை சிரித்துக் கொண்டே பாடி தனது பேச்சை நிறைவு செய்தார்.
ராமர் கோயில் திறப்பு: ப்ளூ ஸ்டார் இசை வெளியிட்டு விழாவில் அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு எதிரான கருத்துக்களே நிறைந்து உள்ளன என சமூக வலைதளங்களில் அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன், பா. ரஞ்சித்தை ராம பக்தர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்த வாரம் வெள்ளிக்கிழமை குடியரசு தினத்தை முன்னிட்டு ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகிறது. ஆர்.ஜே. பாலாஜி, மீனாட்சி சவுத்ரி நடித்த சிங்கப்பூர் சலூன், யோகி பாபுவின் தூக்குத்துரை உள்ளிட்ட பல படங்கள் மோதுகின்றன. ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் உள்ளிட்ட படங்களுக்கு இடையே பாக்ஸ் ஆபிஸ் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











