கீர்த்தி சுரேஷ் திருமணம்.. தொடங்கியது கொண்டாட்டம்.. களைகட்டிய பார்ட்டி
சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷுக்கு டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக திருமணம் நடக்கவிருக்கிறது. அவர் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனி தட்டிலை கரம் பிடிக்கவிருக்கிறார். திடீரென கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என்று வெளியான அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமாவையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. திருமண வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்துவருகின்றன. இந்தச் சூழலில் திருமணத்துக்கு முன்பான பேச்சிலர் பார்ட்டி களைகட்ட தொடங்கியிருக்கிறது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் பிஸியான நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இப்போது ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கிய இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முதல் படத்திலேயே அமைதியான, பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது திறமையை வெளி காண்பித்து மிகப்பெரிய ஹீரோயினாக வலம் வந்தார்.

தேசிய விருது: இப்படிப்பட்ட சூழலில் நடிகையர் திலகம் என்று புகழப்படும் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி படத்தில் நடித்தார். அதுவரை கீர்த்தி சுரேஷுக்கு நடிக்கவே தெரியவில்லை என்று சொன்னவர்கள் எல்லாம் அந்தப் படத்தை பார்த்து வாயடைத்து போய்விட்டார்கள். மேலும் அப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். ஆனால் தேசிய விருது பெற்றால் வாய்ப்புகள் ஒரு நடிகைக்கு தொடர்ந்து கிடைக்காது என்ற ராசிக்கேற்ப கீர்த்திக்கு சின்ன சறுக்கல் ஏற்பட்டது.
மீண்டும் பிஸி: அவ்வப்போது தமிழில் தலை காட்டி வந்த அவருக்கு மாமன்னன் படம் நன்றாக கம்பேக் கொடுத்தது.அதில் பெரிய ஸ்பேஸ் கிடைக்கவில்லை என்றாலும் கீர்த்திக்கு அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. இதன் காரணமாக மீண்டும் அவர் பிஸியானார். அதன்படி சைரன், ரகுதாத்தா உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்த இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பை பெற்றாலும் அவரது நடிப்பு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் ஹிந்தியிலும் இப்போது பேபி ஜான் படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.
திருமணம்: இதற்கிடையே கீர்த்தி சுரேஷின் காதல் பற்றி சமீப காலமாக நிறைய கிசுகிசுக்கள் பரவின. அவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்படியாக அவரே தனது காதலரை சமீபத்தில் அறிமுகப்படுத்தினார். அவர் கீர்த்தியின் பள்ளி தோழர் ஆண்டனி தட்டில். கொச்சி, சென்னை, துபாய் உள்ளிட்ட இடங்களில் தொழிலதிபராக வலம் வரும் அவருக்கும் கீர்த்திக்கும் டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக திருமணம் நடக்கவிருக்கிறது. அந்த திருமண பத்திரிகையும் வெளியானது.
களைகட்டும் பார்ட்டி: திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால் கீர்த்தி சுரேஷ் கோவாவுக்கு புறப்பட்டு சென்றார். அதுதொடர்பான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க இப்போதே தனது நெருங்கிய நண்பர்களுக்கு மணமக்கள் பேச்சிலர் பார்ட்டி கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதுதொடர்பான ஃபோட்டோக்களும் ட்ரெண்டாகியிருக்கின்றன. முன்னதாக இந்தத் திருமணத்தில் அட்லீ, ப்ரியா, விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் என திரையுலகிலிருந்து சிலர் மட்டுமே கலந்துகொள்ளவிருப்பதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











