இந்தி பட அறிவிப்பை வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. வேறலெவலில் வச்சு செய்யும் ரசிகர்கள்.. அதான் மேட்டரா?
சென்னை: இயக்குநர் அட்லீ பாலிவுட்டில் தயாரிப்பாளர் ஆகி விட்டார் என பிரம்மாண்ட பூஜை நடத்தப்பட்ட வீடியோ இன்று வெளியானது. தெறி படத்தை இந்தியில் ரீமேக் செய்யப் போகிறார் என சில மாதங்களாகவே சொல்லப்பட்டு வந்த நிலையில், அந்த படத்தின் பூஜை ஒரு வழியாக இன்று தொடங்கியது. அந்த படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இந்நிலையில், அந்த படத்தின் பூஜை வீடியோவை வெளியிட்டு கீர்த்தி சுரேஷ் போட்ட ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட தமிழ் ரசிகர்கள் அவரை திட்டத் தொடங்கி விட்டனர்.
மலையாள நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பொன் ராம் இயக்கத்தில் வெளியான ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து தனுஷ் உடன் இணைந்து தொடரி படத்தில் நடித்து படுதோல்வியை சந்தித்தார். மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அவர் நடித்த ரெமோ படம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், பெரிதாக ஓடவில்லை.

தொடர்ந்து ஃபிளாப்: அடுத்து விஜய்யுடன் பைரவா, பாபி சிம்ஹாவுடன் பாம்பு சட்டை, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, சியான் விக்ரம் உடன் சாமி ஸ்கொயர், விஷால் உடன் சண்டக்கோழி 2 என பல படங்கள் படுதோல்வியை சந்தித்தன. சில காலம் ஓடிடி ஹீரோயினாக மாறியும் சில படங்களை வெளியிட்டார். அந்த படங்களும் பெரிதாக ஓடவில்லை.
தேசிய விருது: விஜய்யுடன் அவர் நடித்த சர்கார் படம் வசூலில் வேட்டையாடியது. அதன் பின்னர் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார். ஆனால், அதன் பின்னரும் அவர் நடிப்பில் வெளியான பெண்குயின், மிஸ் இந்தியா, ரங் தே, அண்ணாத்த, மரைக்காயர், குட் லக் சகி, சாணிக் காயிதம், சர்காரு வாரி பாட்டா என பல படங்கள் பெரிதாக ஓடவில்லை.
இந்தி தெரியாது போயா: கடந்த ஆண்டு வெளியான மாமன்னன் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த படமும் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில், அடுத்து ரகு தாத்தா படம் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் அந்த படத்தின் டீசர் வெளியான நிலையில், அதில் கீர்த்தி சுரேஷ் இந்தி தெரியாது போயா எனும் பேசும் வசனம் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை கவர்ந்தது. இந்தி திணிப்புக்கு எதிரான படம் என தமிழ் ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.
இந்தி பட பூஜை: இந்நிலையில், அந்த படம் வெளியாவதற்கு முன்னதாகவே நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் நடிக்கப் போகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அட்லீ தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவாக உள்ள தெறி படத்தின் இந்தி ரீமேக் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ள நிலையில், ரசிகர்கள் "இந்தி தெரியாது போடி" என கமெண்ட் போட்டு கீர்த்தி சுரேஷுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காப்பி படத்தையே ரீமேக்: தெறி படமே சத்ரியன் மற்றும் பாட்ஷா படங்களின் காப்பி தான் என கலாய்க்கப்பட்ட நிலையில், அந்த படத்தையே அட்லீ இந்தியில் ரீமேக் செய்கிறார் என்றால் பலே ஆளுதான் என்றும் அந்த அளவுக்கு பெரிய நடிகர்கள் படங்களுக்கே கதை பஞ்சம் இருக்கிறதா? என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications