Keerthy Suresh: அரசியலுக்கு வரும் ஆசை வருங்காலத்தில் வரலாம்.. கீர்த்தி சுரேஷ் பேச்சு!
சென்னை: ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக சில தினங்களே உள்ளதால் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படு பிஸியாக உள்ளார் கீர்த்தி சுரேஷ், மதுரையில் நடைபெற்ற ப்ரோமோஷனில் பேசிய அவர், வரும் காலத்தில் அரசியலுக்கு வரும் ஆசை வரலாம் என பேசி உள்ளார். இதனை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ், தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும், முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது, இவர் கேஜிஎஃப், காந்தாரா உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரித்துள்ள 'ரகு தாத்தா' படத்தில் நடித்துள்ளார்.

ரகு தாத்தா: இப்படத்தை பெரும் வரவேற்பை பெற்ற 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியுள்ளார். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
கீர்த்தி சுரேஷ் பேச்சு: இப்படம் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ள நிலையில், மதுரை கோர்ட் யார்ட் விடுதியில் ரகு தாத்தா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டு பேசினார் அதில், மதுரை எனக்கு ரொம்ப பிடித்த ஊர். மதுரைக்கு நான் அடிக்கடி வந்து செல்வேன். இந்த ஊர் மல்லிகை பூ, மீனாட்சியம்மன் கோயில், ஜிகர்தண்டா என மதுரையில் எனக்கு பிடித்தமான நிறைய விஷயம் இருக்கு.
ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீஸ்: ரகு தாத்தா படம் 15ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் அனைவரையும் சிந்திக்க வைக்க கூடிய படமாக இருக்கும். இப்படத்தில் இந்தி திணிப்பு பற்றி ஆங்காங்கே பேசப்பட்டிருக்கும். பெண்கள் மீது திணிக்கப்படக்கூடிய பல விஷயங்களை பற்றி நகைச்சுவையாக இந்த படத்தில் சொல்லி இருப்போம். இந்த படத்தை ஜாலியாக பாப்கார்ன் சாப்பிட்டுகொண்டே குடும்பத்தோடு சேர்ந்து பார்த்து ரசிக்கலாம்.
காமெடி படம்: பெண்ணியத்திற்காக போராடக்கூடிய கதாப்பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். பெண்கள் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும், இந்த ஆடையைத் தான் அணிய வேண்டு பல கட்டுப்பாடுகளை, பெண்கள் மீது திணித்து வருகிறார்கள். கலாச்சாரம் என்ற பெயரில் சின்ன சின்ன விஷயங்கள் திணிக்கப்படுவதை படத்தில் காட்டியிருக்கிறோம். எதுவுமே சீரியஸாக இருக்காது, காமெடியாக சொல்லியிருப்போம். இது முழுக்க முழுக்க காமெடி படம் தான்.
அரசியல் ஆசை: நான் இப்போதைக்கு அரசியலுக்கு வர வாய்ப்பில்லை. இப்போதைக்கு நடிப்பு மட்டும் தான். எதிர்காலத்தில் அரசியல் ஆசை வரலாம், வராமலும் இருக்கலாம். ரகு தாத்தா படம் இந்தி திணிப்புக்கு எதிரான படம், இது போன்ற படத்தை தமிழ் நாட்டில் மட்டும் தான் பேச முடியும். இந்திக்கு எதிராக பேசி விட்டு, இந்தி படத்தில் நடிக்கலாமா என்ற கேள்வி வருகிறது. நான் இந்தி மொழியை எதிர்க்கவில்லை, இந்தியை திணிக்கக்கூடாது என்பது தான் என் கருத்து என்றார்.


Click it and Unblock the Notifications











