ரஜினியின் அந்தப் படத்தில் நடித்தது வருத்தமாக இருக்கிறது.. என்ன குஷ்பூ இப்படி சொல்லிட்டாங்க?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் கூலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இந்தச் சூழலில் ரஜினியுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை குஷ்பூ அண்ணாத்த படத்தில் நடித்தது குறித்து ஒரு பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ஆஹா குஷ்பூ என்ன இப்படி ஓபனாக பேசிட்டாங்க என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
ரஜினிகாந்த்துக்கு கடந்த சில வருடங்களாக ஹிட்டுக்காக ஏங்கிக்கொண்டிருந்தார். அப்படி அவர் நடித்த ஜெயிலர் படம் அவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக்கொடுத்தது. ஆனால் அவரது படங்களில் தர்பாரும், அண்ணாத்த திரைப்படங்களும் படுதோல்வியை சந்தித்தன. படுதோல்வி என்பதை தாண்டி அண்ணாத்த திரைப்படம் கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. அந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார். அஜித்துக்கு எப்படி வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களை ஹிட் படங்களாக சிவா கொடுத்தாரோ அதேபோல் ரஜினிக்கும் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

ஒன்றுமே இல்லை: அந்த எதிர்பார்ப்புடனேயே படம் பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான அந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இந்தப் படத்தில் நடிப்பதற்காக பொன்னியின் செல்வன் பட வாய்ப்பையே கீர்த்தி சுரேஷ் வேண்டாம் என்று சொல்லிவிட்டார். ஆனால் படம் படுதோல்வியைத்தான் சந்தித்தது. வழக்கமான கதை அரத பழசான திரைக்கதை என சிவா சொதப்பிவிட்டார் என்று ரசிகர்கள் ஓபனாக பேசினார்கள்.
பரிசளித்த ரஜினி: படம் பெரும் தோல்வியை சந்தித்தாலும் இயக்குநர் சிவாவுக்கு ரஜினிகாந்த் தங்க சங்கிலியை பரிசளித்தார். இது ரசிகர்களுக்கு மேலும் ஆச்சரியத்தை கொடுத்தது. எது எப்படியோ அண்ணாத்த தோல்வியிலிருந்து அவரை ஜெயிலர் திரைப்படம் மீட்டுவிட்டதை நினைத்து சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் அந்தப் படத்தில் நடித்தது குறித்து பிரபல நடிகை குஷ்பூ ஓபனாக பேசியிருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "அண்ணாத்த படத்தில் மீனாவும் நானும் இணைந்து நடித்தோம்.
அப்படித்தான் சொன்னார்கள்: இந்தப் படத்தில் நீங்களும்,மீனாவும்தான் கதாநாயகிகள் என்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தார்கள். மேலும் ரஜினிக்கு படத்தில் வேறு ஜோடி இல்லை என்றும்; நாங்கள் இருவரும் படத்தின் கடைசிவரை வருவோம் என்றும் உத்தரவாதம் கொடுத்திருந்தனர். அதனை முழுக்க முழுக்க நம்பித்தான் அந்தப் படத்தில் நான் நடித்தேன். முதலில் எனது கேரக்டர் நன்றாகவே எழுதப்பட்டிருந்தது. ஆனால் படத்தில் திடீரென்று ரஜினிக்கு ஜோடியாக நடிக்க நயன் வந்தார்.
ரஜினி செய்திருக்கமாட்டார்: அதன் காரணமாக எனது கதாபாத்திரம் காமெடியாக மாற்றப்பட்டது. அதனை உணர்ந்து வருத்தப்பட்டேன். முக்கியமாக படத்தை பார்த்த பிறகு நான் ரொம்பவே ஏமாற்றமடைந்தேன். அந்தப் படத்தில் நான் நடித்திருக்கக்கூடாது. கேரக்டரை மாற்றம் செய்ததை ரஜினிகாந்த் நிச்சயம் செய்திருக்கமாட்டார். அவரை எனக்கு பல வருடங்களாக தெரியும். என்ன நடந்தது என்று தெரியவில்லை. இது இயக்குநரின் வேலையா இல்லை தயாரிப்பாளரின் வேலையா என்பதும் தெரியவில்லை. அதேபோல் ரஜினியுடன் எனக்கும் மீனாவுக்கும் டூயட் இருக்கும் என்றும் சொன்னார்கள். ஆனால் அதுவும் நடக்கவில்லை" என்றார்.


Click it and Unblock the Notifications











