சினிமாவுக்கு வந்தால் அதுதான் நடக்கும்.. அட குஷ்பூ மகள் இவ்வளவு ஓபனாக பேசிட்டாங்களே
சென்னை: குஷ்பூ கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்துவந்த அவர்; இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சியை கடந்த 2000ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் இருக்கும் குஷ்பூ இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். அவருக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் ஒருவர் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகவிருக்கிறார்.
மும்பையை சேர்ந்த குஷ்பூ தனது திரைப் பயணத்தை பாலிவுட்டில் தொடங்கினார். அங்கு அவருக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தென் மாநில சினிமாக்கள் மீது அவருக்கு கவனம் திரும்பியது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் தெலுங்கு சினிமாவில் முதன்முறையாக நடித்தார். தெலுங்கை தொடர்ந்து தமிழில் அறிமுகமானார். அப்படி அவர் நடித்த தமிழ படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. இதனால் தான் அறிமுகமான சில படங்களிலேயே தன்னிடம் அழகு மட்டும் இல்லை திறமையும் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக கோலிவுட்டுக்கு உணர்த்தினார்.
முன்னணி நடிகையான குஷ்பூ: அறிமுகமான கொஞ்ச காலத்திலேயே குஷ்பூ படு பிஸியான நடிகையாக மாறினார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், சத்யராஜ் அப்போதைய முன்னணி ஹீரோக்கள் பலருடனும் நடித்தார். தமிழ் மட்டுமின்றி வேறு மொழிகளிலும் நடித்தார் அவர். இப்போதெல்லாம் தமிழ் நன்றாக பேச தெரிந்தாலே நடிகைகளில் சிலர் சொந்த குரலில் டப்பிங் பேச மறுக்கிறார்கள். ஆனால் குஷ்பூவோ தான் அறிமுகமான சில படங்களிலேயே தமிழை முறையாக கற்றுக்கொண்டு டப்பிங் பேசி அதகளப்படுத்தினார்.

தமிழ்நாட்டில் குஷ்பூவுக்கு செம கிரேஸ்: குஷ்பூ மீது 80ஸ் கிட்ஸ் உச்சக்கட்ட கிரேஸில் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. குறிப்பாக குஷ்பூ இட்லி என்றே ஒரு இட்லி வகை செய்யப்பட்டது. இதுபோன்று அதுவரை தமிழ் சினிமாவில் எந்த நடிகைக்கும் நடந்ததில்லை. ஒருகட்டத்தில் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. அதேசமயம் சின்னத்திரையிலும் தோன்றிய அவர்; நாடகங்களில் நடித்தும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் தன்னை எப்போதும் பிஸியாக வைத்துக்கொண்டார்.
அரசியல்வாதியான குஷ்பூ: நடிகையாக மட்டுமின்றி அரசியலிலும் தனது தடத்தை பதிவு செய்திருக்கும் குஷ்பூ முதலில் திமுகவில் இருந்தார். அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆனால் அங்கு சில காலம் இருந்த அவர் இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். குஷ்பூவைப் பொறுத்தவரை தனது மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பட்டென்று பேசிவிடக்கூடியவர். ஆனால் அந்தப் பேச்சு அவருக்கு சில பிரச்னைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
குஷ்பூவின் மகளுக்கு நடிப்பின் மீது ஆசை: இதற்கிடையே சுந்தர்.சி இயக்கத்தில் முறைமாமன் படத்தில் நடித்தபோது சுந்தருடன் குஷ்பூவுக்கு காதல் தோன்றியது. சில வருடங்கள் காதலித்த அவர்கள் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தக் லைஃப் படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக வேலை செய்துகொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு மகளுக்கு நடிப்பதற்கு ஆர்வம் இருப்பதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன.
குஷ்பூவின் மகள் பேட்டி: இந்நிலையில் குஷ்பூவின் மகள்களில் ஒருவரான அவந்திகா சினிமாவில் அறிமுகமாகவிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "நான் சினிமாவுக்கு வந்தால் கண்டிப்பாக அம்மாவுடன் என்னை ஒப்பிடத்தான் செய்வார்கள். ஆனால் அம்மா மாதிரி உழைப்பு, தீவிரம், நடிப்பை சீரியஸாக எடுத்துக்கொள்வது போன்றவை எல்லாம் எனக்கும் அமைய வேண்டும். அதெல்லாம் பெரிய விஷயம். அம்மாவைப் போல் வருவது கடினம். இருந்தாலும் அதற்கான முயற்சியையும், பயிற்சியையும் எடுக்க வேண்டும். அவங்க மிகப்பெரிய ஆர்ட்டிஸ்ட்" என்றார்.


Click it and Unblock the Notifications











