Kushboo: சினிமாவில் 45 ஆண்டுகளை கடந்த குஷ்பூ.. வீடியோ வெளியிட்டு உற்சாகம்.. மீனா கொடுத்த அட்வைஸ்!
சென்னை: நடிகை குஷ்பூ தென்னிந்திய ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர். தொடர்ந்து சினிமாவில், அரசியலில் பிசியாக இருந்துவரும் குஷ்பூ, தன்னுடைய 7 வயதில் சினிமா கேரியரை துவங்கினார். குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் படங்களில் நடித்துள்ள குஷ்பூ, கார்த்திக் ஜோடியாக வருஷம் 16 படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
முதல் படமே மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பை கொடுத்த நிலையில், நிற்கக்கூட நேரமில்லாமல் தொடர்ந்து பல ஆண்டுகளாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போதும் தேர்ந்தெடுத்த கேரக்டர்களில் நடித்துவரும் குஷ்பூ, தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வருகிறார்.

நடிகை குஷ்பூ: நடிகை குஷ்பூ, 80 மற்றும் 90களின் காலகட்டங்களில் மிகவும் பிசியான நடிகையாக இருந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ் என முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் படத்தயாரிப்பு நிறுவனங்களுடன் அடுத்தடுத்து நடித்தவர். இவரது கால்ஷீட்டிற்காக இவர்கள் காத்திருந்த சம்பவங்களும் நடந்தன. மாடர்ன் லுக், ஹோம்லி கேரக்டர்கள் என அனைத்திலும் தன்னை சிறப்பாக பொருத்திக் கொண்ட குஷ்பூ தன்னுடைய 7 வயதிலிருந்து நடித்து வருகிறார். பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடித்துவந்த குஷ்பூ, தமிழில் வருஷம் 16 படம் மூலம் கார்த்திக் ஜோடியாக நடித்து என்ட்ரி கொடுத்திருந்தார்.
சினிமாவில் 45 ஆண்டுகள்: இந்த முதல் படமே அவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்திருந்தது. அழகான மற்றும் திறமையான நடிகையாக குஷ்பூ பார்க்கப்பட்டார். தொடர்ந்து இவரது பல படங்கள் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்துக் கொண்டன. ஒரு கட்டத்தில் தன்னுடைய படத்தை இயக்கிய சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட குஷ்பூவிற்கு அனந்திகா மற்றும் அவந்திதா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் தான் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கி 45 ஆண்டுகள் ஆகியுள்ளதாக குஷ்பூ தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதையொட்டி தன்னுடைய சிறுவயது லுக் முதல் தற்போதைய தோற்றம் வரையில் இணைத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அழகான பயணம்: 7 வயதிலிருந்து தான் நடித்து வருவதாக தெரிவித்துள்ள குஷ்பூ, ஒவ்வொரு அடியிலும் புதிய புதிய விஷயங்களை கற்று வந்துள்ளதாகவும் உற்சாகம் தெரிவித்துள்ளார். சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து தன்னை வளர்த்துக் கொண்டுள்ளதாகவும் இந்த பயணம் மிகவும் அழகானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் நடிப்பை தவிர்த்து மற்ற எதையும் யோசிக்க முடியாது என்றும் குஷ்பூ தெரிவித்துள்ளார். தன்னுடன் இருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீனா அட்வைஸ்: தன்மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஆதரவு அளித்து தன்னை உற்சாகப்படுத்தி விமர்சனம் செய்து தன்னுடன் பயணித்துவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள குஷ்பூ, தான் செய்யும் அனைத்து விஷயங்களையும் சிறப்பாகவே செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியையும் அன்பையும் மீண்டும் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து நடிகை, தயாரிப்பாளர், அரசியல்வாதி என பயணித்துவரும் குஷ்பூ, இளம் நடிகைகளுக்கு மிகப்பெரிய உத்வேகமாக உள்ளார். அவர் 45 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்துவருவது குறித்த இந்த பகிர்வு ரசிகர்களை அதிகமாக ஈர்த்துள்ளது. இதனிடையே குஷ்பூவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை மீனா, அவரது இந்தப் பயணத்தை புத்தகமாக்கவும் அட்வைஸ் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











