சூப்பர் ஸ்டார்னா ரஜினி மட்டும்தான்.. நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரா?.. பட்டுனு உடைத்த குஷ்பூ
சென்னை: நடிகை நயன்தாரா சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கோரிக்கையை வைத்திருந்தார். அது பலரிடமும் கிண்டல், கேலியை சந்தித்தது. ரசிகர்களில் ஒருதரப்பினரோ யாருமே அவரை அப்படி அழைக்கவில்லையே என்று ஓபனாகவே அடிக்க ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட சூழலில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ; நயன் விவகாரத்தில் தனது கருத்தினை பதிவு செய்திருக்கிறார்.
நயன்தாரா இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்த அவர் அறம், மாயா, நானும் ரௌடிதான் என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்தார். இவற்றில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்தது. இரண்டு பேரும் சில வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்தார்கள். பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
திருமணத்துக்கு பின் பிஸி: திருமணம் ஆன கையோடு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றார்கள் அவர்கள். பொதுவாக கல்யாணம் முடிந்துவிட்டாலே நடிப்பிலிருந்து நடிகைகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் நயனோ திருமணத்துக்கு பிறகும் படு பிஸியாக நடித்தார். முக்கியமாக ஹிந்தியில் ஜவான் படத்தின் மூலம் காலடியும் எடுத்து வைத்தார். இப்போது அவர் மண்ணாங்கட்டி, ராக்காயி, டெஸ்ட், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியிருக்கிறார்.
சர்ச்சை நயன்: சமீப காலமாக நயன்தாராவை சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள் வர ஆரம்பித்திருக்கின்றன. முதலில் தனுஷுடன் அவருக்கு மோதல் ஆரம்பித்தது. பிறகு பத்திரிகையாளர்கள் மூன்று பேரை குரங்குகள் என்று கூறினார். இந்த இரண்டு விவகாரங்களிலுமே நயனை கடுமையாக பலரும் சாடினார்கள். அதேபோல் மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை வைத்தும் அவரை விமர்சனம் செய்தார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் சில நாட்களுக்கு அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

என்ன அறிக்கை: அதாவது அந்த அறிக்கையில், "என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். எனது வாழ்க்கை எப்போதும் ஒரு திறந்த புத்தகமாகவே இருந்திருக்கிறது. உங்கள் அன்பும் ஆதரவும்தான் அதற்கு அழகு சேர்த்திருக்கிறது. எனது வெற்றியின்போது என்னை தோளில் சாய்த்து பாராட்டியதோடு கடினமான தருணங்களில் என்னை தூக்கி நிறுத்தவும் செய்தீர்கள். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஆனால் இனிமேல் என்னை நயன்தாரா என்று மட்டுமே அழையுங்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.
மூக்குத்தி அம்மன் 2 பூஜை: நயன்தாரா இப்படி அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து பலரும் அவரை கிண்டல் செய்ய ஆரம்பித்தார்கள். நீங்கள் சொல்லும்படி உங்களை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கவில்லையே என ஓபனாக சமூக வலைதளங்களில் பேசினார்கள். இந்நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் விவகாரம் குறித்து நடிகை குஷ்பூ ஓபனாக சில விஷயங்கலை பேசியிருக்கிறார். மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர்.சி இயக்க அதில் நயன் ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது.
குஷ்பூவின் பதில்: அந்தப் பூஜைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூவிடம் இந்த விவகாரம் குறித்து கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பூ, "நயன்தாரா எடுத்த முடிவு ரொம்பவே சரியானது. பட்டத்தை ஒருவருக்கு கொடுக்க என்ற அவசியம் இல்லை. எங்கள் காலத்தில் பட்டம் எதுவும் கொடுத்து பார்த்ததில்லை. சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும்தான். மற்ற யாருக்கும் பட்டம் கொடுக்காமல் அவரவர் பெயரை வைத்து அழைத்தாலே போதுமானது" என்றார்.


Click it and Unblock the Notifications











