லாக்டவுனுக்கு பின் படப்பிடிப்பு.. நெருக்கமானக் காட்சிகளில் எப்படி நடிப்பது? பிரபல நடிகை முடிவு!
சென்னை: லாக்டவுனுக்கு பிறகு தொடங்கும் சினிமா படப்பிடிப்புகள் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார் நடிகை லாவண்யா திரிபாதி.
தமிழில், சாக்ரடீஸ் இயக்கத்தில் சசிகுமார் நடித்த பிரம்மன் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் லாவண்யா திரிபாதி.
தொடர்ந்து சி.வி.குமார் இயக்கத்தில் வெளியான மாயவன் படத்தில் நடித்திருந்தார்.

முன்னணி நடிகை
அடுத்து அதர்வா நடிக்கும் படத்தில், ஹீரோயினாக நடிக்கிறார். படத்தை ரவீந்த்ரா மாதவன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். லாவண்யா திரிபாதி, ஐஏஎஸ் அதிகாரியாகும் முயற்சியில் இருப்பவராக நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர், ராஜமவுலி தயாரித்த அண்டால ராக்ஷசி என்ற படம் மூலம் அங்கு அறிமுகமானவர்.

நடவடிக்கை
கொரோனா வைரஸ் காரணமாக, இப்போது லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

சினிமா படப்பிடிப்பு
இருந்தும் இந்த வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சினிமா, டிவி தொட்ர் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்க இப்போது அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் முதல், சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முக்கியத்துவம்
இந்நிலையில், லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கினால் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை லாவண்யா. அவர் கூறும்போது, படப்பிடிப்புகளில், பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்னையும் என் உதவியாளர்களையும் பாதுகாப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்.

நெருக்கமான காட்சி
லாக்டவுனுக்கு பிறகு படப்பிடிப்புக்குச் சென்றால் அது உண்மையிலேயே வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஆனால், அரசு சொல்கிற வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். நெருக்கமான காட்சிகள் இருந்தால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவுக்கு அதை தவிர்த்துவிட முயற்சிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











