குப்பைக் கதை ஜெயித்ததா சரித்திரமே இல்லை.. வேண்டா வெறுப்பாத்தான் அப்பா வந்தாரு.. ஹீரோயினான லிவிங்ஸ்டன் மகள்!
சென்னை: நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா ஹீரோயினாக புதிய படத்தில் நடிக்கவுள்ளார். அந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தான் ஒரு பாடிகார்டாகத்தான் வந்தேன் என சொன்ன லிவிங்ஸ்டன் "குப்பைக் கதை என்றுமே ஜெயித்ததாக சரித்திரமே இல்லை" என்றார். மேலும், ஜோவிதா பேசும் போது, அப்பா வேண்டா வெறுப்பாத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தார் என்றார்.
தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணசித்ர நடிகராகவும் நடித்து அசத்தியவர் லிவிங்ஸ்டன். சமீப காலமாக சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்த லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிதா தற்போது ஹீரோயினாக இயக்குநர் கே.எஸ். கிஷான் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படத்தின் பூஜை இன்று சிறப்பாக நடந்து முடிந்தது. பூஜையில் கலந்துக் கொண்டு தனது மகளை வாழ்த்திய லிவிங்ஸ்டன் அவருக்கு அட்வைஸும் செய்தார்.
ஹீரோயினான லிவிங்ஸ்டன் மகள்: பாடகியாக வருவார் என லிவிங்ஸ்டன் ஆசைப்பட்ட நிலையில், சிறு வயதில் இருந்தே அப்பாவையும் படங்களையும் பார்த்து நடிப்பின் மீது தான் தனக்கு ஆர்வம் அதிகமாகிவிட்டது என ஹீரோயினாக களமிறங்கியுள்ளார் ஜோவிதா. ஏற்கனவே குற்றம் கடிதல் 2 படத்திலும், இன்னுமொரு பெயரிடாத படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், தற்போது ஹீரோயினாக இந்த படத்தில் அறிமுகம் ஆகவுள்ளதாகவும் கூறினார்.
குப்பைக் கதை ஜெயிக்காது: சமீப காலமாக சிறு பட்ஜெட் படங்களை யாருமே மதிப்பதில்லை. மக்கள் தியேட்டருக்கு வந்து படங்களை பார்ப்பதில்லை. குப்பைக் கதைகள் என்றுமே ஜெயித்ததாக சரித்திரமே இல்லை. ஆனால், அதே நேரம் நல்ல நல்ல கதைகள் தோற்காது. இயக்குநர் கிஷான் சொன்ன கதை ரொம்பவே பிடித்தது. மகள் ஆசைப்பட்டது போல ஹீரோயினாகி விட்டார். இளைஞர்கள், நல்ல கதைகளை உருவாக்கி அதன் பின்னர் சினிமாவில் நடிக்க ஆரம்பிக்க வேண்டும். மணிகண்டன் நடிக்கும் படங்கள் எல்லாம் நல்லா இருக்கு அவரது லவ்வர், குடும்பஸ்தன் படங்கள் போல படங்கள் உருவாக வேண்டும் என பேசினார் லிவிங்ஸ்டன்.
அப்பாவுக்கு பிடிக்கல: தான் ஹீரோயினாக மாறியது அப்பாவுக்கு பிடிக்கவில்லை என்றும் வேண்டா வெறுப்புடன் தான் நிகழ்ச்சிக்கு வந்தார் என்றும் சினிமாவில் நடிப்பது மற்றும் கதைகளை முடிவு செய்வது என்னுடைய விருப்பம் தான் என ஜோவிதா பேசினார். அதெல்லாம் இல்லை, இந்த சிறு வயதிலேயே என் மகள் வெற்றி, தோல்விகளை தாங்கும் பக்குவத்தை கொண்டிருக்கமாட்டாள் என்கிற பயம் தான் என பேசி மகளை வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











