twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மார்பக புற்றுநோயா...அச்சப்படாதீங்க: நடிகை கவுதமி அட்வைஸ்

    By Mathi
    |

    Gowthami
    சென்னை; இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் சென்னையில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

    அப்பல்லோ மருத்துவமனை புற்றுநோய் மையம் சார்பில் உலக பெண்கள் தினத்தையொட்டி சென்னையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் பிரிதா ரெட்டி தலைமை தாங்கினார். நடிகை கவுதமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மார்பக புற்றுநோய் தடுப்பு முறைகள்' என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசினார்.

    நடிகை கவுதமி பேசியதாவது:

    உலக அளவில் பெண்களை மிகவும் அச்சுறுத்தும் வகையில் மார்பகப் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. ஆனால், மருத்துவத் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியால் மார்பகப் புற்றுநோயைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இது முற்றிலும் குணப்படுத்தக்கூடியதுதான் என இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    எனக்கு 32-வது வயதில் மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த நோய் பொதுவாக உடல் மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இந்நோயால் பாதிப்படைந்தவர்கள் மன ரீதியான பாதிப்பிலிருந்து விடுதலை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனை, மருந்துகளைச் சாப்பிடுதல் ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மார்பகப் புற்றுநோயை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

    மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்துவிட்டால், சிகிச்சை பெற்று குணம் அடைவது எளிது. இந்தப் பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு வரக்கூடியது என்பதால், மருத்துவரை முன்கூட்டியே அணுகி தங்களுக்கு மார்பகப் புற்றுநோய் இருக்கிறதா என்பதை பெண்கள் பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

    தவறான உணவுப் பழக்கமும் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கு ஒரு காரணம் என்பதால் ஆரோக்கியமான மற்றும் இயற்கையான உணவு முறையைப் பின்பற்றினால் இந்தப் புற்றுநோய் வராமல் தடுத்துக்கொள்ள முடியும். மார்பகப் புற்றுநோய் என்பது தனிநபரைச் சார்ந்தது அல்ல. இதனை சமூகப் பிரச்னையாக பார்க்க வேண்டும். மார்பகப் புற்றுநோய் வந்துவிட்டால் அதை துணிச்சலோடும், மருத்துவரின் ஆலோசனையோடும் எதிர்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் இணைந்து மார்பகப் புற்றுநோயற்ற உலகை உருவாக்குவதில் முனைப்புக் காட்ட வேண்டும் என்றார் நடிகை கௌதமி.

    இந்நிகழ்ச்சியில் மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செல்வி பேசியதாவது:

    இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு ஆளாகிறார்கள். இதற்கு காரணம் பெண்களிடையே சரியான விழிப்புணர்வு இல்லாதது தான். பயம், அறியாமை மற்றும் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாதது போன்ற காரணங்கள் பல பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    மீன், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதும், காரம் மிகுந்த உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும். வயதுக்கு வந்தது முதல் பெண்கள் தினந்தோறும் தங்களது மார்பகங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மார்பகங்களில் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் அது பற்றி மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. வெட்கப்பட்டு கொண்டோ, பயந்து கொண்டோ மறைப்பது நல்லதல்ல. பெண்களுக்கு தற்போது பயம் இல்லாத விழிப்புணர்வு தான் தேவை என்றார் அவர்.

    English summary
    Seven years after she first realised that she had breast cancer, yesteryear heroine Gowthami admits that she probably wouldn’t have spotted it if it hadn’t been for a simple self-examination of her breast. “It’s one of the simplest things that can be done, but it could end up making all the difference between life and death,” she said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X