மலையாளத்தை அடுத்து மற்றொரு தென்னிந்திய மொழி.. கும்பமேளா மோனாலிசாவுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு பாஸ்!
ஹைதராபாத்: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளா, உலகம் முழுவதும் பேசு பொருளாக மாறியது என்றால், அங்கு பாசிகள் விற்றுக் கொண்டு இருந்த மோனாலிசாவும் இந்திய அளவில் புகழ் பெற்றார். அவரது வசீகரமான கண்கள் அவரை இணைய உலகத்தில் ஒரே நாளில் ட்ரெண்ட் ஆக்கியது. அதன் பின்னர் பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் தற்போது தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து கால் பதித்து வருகிறார். அதாவது, ஏற்கனவே மலையாளப் படத்தில் கமிட் ஆகி இருந்த நிலையில், தற்போது தெலுங்கு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
கும்பமேளா விழாவின் போது, மோனாலிசாவின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி அவரை வைரல் ஆக்கியது. இணையவாசிகள் தாங்களாகவே உருவாக்கி பகிர்ந்த புகைப்படங்களில் படத்தில் அவர் மாடர்ன் ஆடைகளில் இருப்பது போல இருந்தது. அதன் பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் வரவே, அவருக்கு பட வாய்ப்பு கொடுக்க முன்வந்தவர்கள், லுக் டெஸ்ட், மேக்-அப் டெஸ்ட் உள்ளிட்டவற்றை எடுத்தார்கள்.
அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரை மேலும் வைரலாக்கியது. மாடர்ன் ஆடைகள் அணிந்து, சுருண்ட கூந்தலுடன், அதிக மேக்கப்புடன் இருந்த புகைப்படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. மோனாலிசா தனது கவர்ச்சிகரமான கண்களுக்காகவும், வசீகரமான புன்னகைக்காகவும் கும்பமேளாவில் பிரபலமடைந்தார். அவரது பழுப்பு நிற கண்கள் பலரையும் கவர்ந்தன.

மலையாள படம்: இவர் ஏற்கனவே பாலிவுட்டில் மினி பட்ஜெட் படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். சிலர் கடை திறப்பு விழாவுக்கும் அவரை அழைக்கிறார்கள். ஆல்பம் பாடல்களில் நடிக்கிறார். மோனாலிசா தன்னையும் சினிமா உலகில் நிலைத்து நிற்க சில திறமைகளையும் வளர்த்து வருகிறார். ஏற்கனவே அவர் மலையாள திரையுலகில் மலையாள நடிகர் கைலாசுடன் இணைந்து நாகம்மா என்ற படத்தில் நடித்து வருகிறார் . பினுவர்க்கீஸ் இயக்கும் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு அறிமுகம்: இந்நிலையில் அவர் தற்போது தெலுங்கு திரையுலகிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். அதாவது, தெலுங்கில் இயக்குநர் ஸ்ரீனு கோட்டா பேட்டி இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்க விழாவில் மோனாலிசா பேசுகையில், " எனது வாழ்க்கையில் புதிய அத்தியாத்தை தொடங்குவதில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. விரைவில் தெலுங்கு கற்றுக் கொண்டு, ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான நபராக மாற அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
எங்கேயோ மச்சம்:பாலிவுட், அதன் பின்னர் மலையாள திரையுலகம் தற்போது தெலுங்கு சினிமா என அடுத்தடுத்து இந்திய அளவில் பல மொழிகளில் நடிக்கும் நடிகையாக உருவெடுத்துள்ளார் மோனாலிசா. இவரது இந்த வளர்ச்சியைப் பார்த்த சிலர் பெண்களுக்கு முதுகில் மச்சம் இருந்தால் யோகம் என்று சொல்வார்கள், மோனாலிசாவுக்கு முதுகில் மச்சம் இருந்தாலும் இருக்கும் என்று பேசி வருகிறார்கள். தென்னிந்திய சினிமாவில் கன்னட சினிமா மற்றும் தமிழ் சினிமாவில் தான் அவர் இன்னும் கால் பதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











