சம்ரிதி தாரா: மலையாளத்தில் இருந்து தமிழுக்கு தாவும் புதுவரவு.. மைனா நடிகருடன் இணைந்த சம்ரிதி தாரா!
சென்னை: மலையாளத்தில் இருந்து ஏராளமான நடிகைகள் மட்டுமில்லாமல் நடிகர்களும் அடுத்தடுத்து தமிழில் என்ட்ரி கொடுத்து சிறப்பான நடிப்பின் மூலம் கவனத்தை பெற்று வருகின்றனர். முன்னணி நடிகர்களாகவும் தங்களை நிலைநிறுத்தி வருகின்றனர். இந்நிலையில் மலையாள நடிகையும் மாடலுமான சம்ரிதி தாரா தமிழில் நாயகியாக களம் இறங்கியுள்ளார்.
மைனா படத்தில் நடித்த நடிகர் சேதுவிற்கு ஜோடியாக மையல் என்ற படத்தின் மூலம் சம்ரிதி தாரா தமிழில் என்ட்ரி கொடுக்க உள்ளார். படத்தை ஏபிஜி ஏழுமலை இயக்கியுள்ள நிலையில் படத்தின் ஷூட்டிங் கல்வராயன் மலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 37 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளன. கிராமத்து கதைக்களத்தில் உருவாகியுள்ள மையல் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாள நடிகை சம்ரிதி தாரா: மலையாளத்திலிருந்து தமிழுக்கு ஏராளமான நடிகைகள் அறிமுகமாகி தொடர்ந்து முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. ஐயா படத்தில் துவங்கிய இவரது பயணம் தொடர்ந்து இருபது ஆண்டுகளை கடந்தும் வெற்றிநடை போட்டு வருகிறது. திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தாயான நிலையிலும் நயன்தாரா லீட் கேரக்டர்களில் நடித்து வருகிறார். அடுத்ததாக இவரது நடிப்பில் மண்ணாங்கட்டி உள்ளிட்ட படங்கள் ரிலீசாகவுள்ளது. நடிகர் கவினுடன் புதிய படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார்.
தமிழில் என்ட்ரி: அந்த வகையில் மலையாளத்தில் சில படங்களில் நடித்து கவனம் பெற்றுள்ள நடிகை சம்ரிதி தாரா அடுத்ததாக மையல் என்ற தமிழ் படம் மூலம் தமிழில் கமிட்டாகி நடித்துள்ளார். மைனா படத்தில் இன்ஸ்பெக்டராக நடித்த நடிகர் சேதுவின் ஜோடியாக இந்த படத்தில் சம்ரிதி நடித்துள்ளார். கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலம் மிகச் சிறந்த கவனத்தை சம்ரிதி தாரா பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். முன்னதாக மாடலிங் மூலமாகவே அவர் மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். மாடலிங்கில் மட்டுமில்லாமல் பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டு பட்டங்களை வென்றுள்ள சம்ரிதி தாராவிற்கு சினிமா சிறப்பாக கை கொடுத்து வருகிறது.
சமூக பிரச்சினையை சொல்லும் மையல்: மையல் படத்தை ஏபிஜி ஏழுமலை இயக்கியுள்ளார். இந்த படம் சமூகப் பிரச்சினையை சொல்லும் வகையில் அமைந்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். படத்தில் பிஎல் தேனப்பன் மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். திருவண்ணாமலைக்கு அருகில் கல்வராயன் மலையின் அழகிய இடங்களிலும் அதை சுற்றிய பகுதிகளிலும் இந்த படத்தின் முழு சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் மொத்த படப்பிடிப்பு பணிகளும் சுமார் 37 நாட்களிலேயே நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சேதுவும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
மைனா புகழ் நடிகர் சேது: மையல் படம் ஒரு சாதாரண அப்பாவி மனிதனின் உரிமைகள் மற்றும் வாழ்க்கையை நிலை நிறுத்தவும் பாதுகாக்கவும் சட்ட அமைப்பு எடுத்த தவறான முடிவால் அவரது உண்மையான காதல் சிதைவடைவதை கதைக்களமாக எடுத்துக் கொண்டுள்ளதாக இயக்குநர் ஏழுமலை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மனிதரின் கொந்தளிப்பான மனநிலையை படம் மையக்கதையாக கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மைனா படத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அடங்காத மனைவிக்கு புருஷனாகவும் உண்மையான காதலர்களை காப்பாற்றும் இன்ஸ்பெக்டராகவும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சேது. இவருக்கு மையல் சரியான ரீ-என்ட்ரியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications