74 வயசு மம்மூட்டிக்கு 21 ஹீரோயின்களா?.. டிசம்பர் 5ல் வெளியாகும் ‘களம் காவல்’
திருவனந்தபுரம்: துல்கர் சல்மானின் குருப் படத்தின் எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்குநராக அறிமுகமாகும் படம் தான் களம் காவல். இதில் மம்மூட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக 21 கதாநாயகிகள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அவரது திரைப்பயணத்தில் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பைசன் படத்தில் துருவ் விக்ரம் அக்காவாக நடித்த ரஜீஷா விஜயன் மம்மூட்டியுடன் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளார்.
காயத்ரி அருண் 'ஒன்' படத்திற்குப் பிறகு மீண்டும் மம்மூட்டியுடன் நடித்துள்ளார். மேலும், பல புதுமுக நடிகைகளும் இந்த படத்தில் மம்மூக்காவுடன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படம் சீரியல் கில்லர் சைனைடு மோகன் கதை என சில வதந்திகள் பரவிய நிலையில், சமீபத்திய பேட்டியில் அதை மம்மூட்டி மறுத்துள்ளார்.
பாலகிருஷ்ணாவுடன் மோதும் மம்மூட்டி: தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி எனும் தயாரிப்பு நிறுவனத்தில் உருவாகும் சிறு பட்ஜெட் படங்களில் நல்ல கதைகளை தேர்வு செய்து தொடர்ந்து நடித்து வருகிறார் 74 வயதாகும் மம்மூட்டி. வரும் டிசம்பர் 5ம் தேதி பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா 2 திரைப்படம் வெளியாகும் நிலையில், மம்மூட்டியின் களம் காவல் படமும் அதே நாளில் வெளியாகிறது.
சீரியல் கில்லர் மம்மூட்டி: களம் காவல் படத்தின் முதல் பார்வை போஸ்டர், மம்மூட்டியின் முற்றிலும் புதிய தோற்றத்தைக் காட்டி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆரம்பத்தில், மம்மூட்டி எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஊகங்கள் நிலவின. ஆனால், "மம்மூட்டியின் இதுவரை கண்டிராத நடிப்புக்காக காத்திருங்கள்" என்ற வாசகத்துடன் வெளியான போஸ்டர், கதையின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியது. Mammootty Kampanyயின் ஏழாவது தயாரிப்பு இது. இந்த படத்தில் சீரியல் கில்லராக மம்மூட்டியும், போலீஸ் அதிகாரியாக விநாயகனும் நடித்துள்ளனர்.
களம் காவல் டீம்: 'குருப்' படத்திற்கு திரைக்கதை எழுதிய ஜித்தின் கே. ஜோஸ், ஜிஷ்ணு ஸ்ரீகுமாருடன் இணைந்து 'களம் காவல்' படத்திற்கும் திரைக்கதை அமைத்துள்ளார். ஃபைசல் அலி ஒளிப்பதிவு செய்கிறார். மகேஷ் நாராயணன் எழுதி இயக்கும் மற்றொரு திரைப்படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளத்தில் நடைபெற்று வருகிறது; மம்மூட்டி விரைவில் அதில் பங்கேற்கவுள்ளார். மோகன்லால், குஞ்சாக்கோ போபன், ஃபகத் பாசில், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படம், மலையாளத்தின் மிக அதிக பொருட்செலவில் உருவாகிறது.
21 ஹீரோயின்கள்: தமிழில் பஹீரா எனும் படத்தில் பிரபுதேவா 8 நடிகைகளுடன் நடித்தது போல இந்த படத்தில் மம்மூட்டி 21 நடிகைகளுடன் நடித்துள்ளார். சமீபத்தில், நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், 21 நடிகைகளும் மேடையேறி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினர். ரஜிஷா விஜயன், காயத்ரி அருண், ஸ்ருதி ராமசந்திரன், மாளவிகா மேனன், தான்யா, முல்லை அரசி, மேகா தாமஸ், பின்ஸி, மோகன பிரியா, அனுபமா, அபி சுஹானா, நிஷா, சீமா, கபானி, தியா என பல நடிகைகள் இந்த படத்தில் நடித்துள்ளனர். கடந்த மாதம் துல்கர் சல்மானின் காந்தா படம் வெளியான நிலையில், இந்த டிசம்பர் மாதம் மம்மூட்டியின் களம் காவல் படம் வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











