சுதந்திர தாகத்தை வளர்க்கும்.. கங்கனா ட்வீட்.. காரணம் இந்த ‘மணிகர்ணிகா’ பொம்மைகள் தான்!
சென்னை: நடிகை கங்கனா ரனாவத்தின் 'மணிகர்ணிகா' பொம்மைகள் சந்தையில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.
அந்த பொம்மை படங்களை ஷேர் செய்த அவர், இவை குழந்தைகள் மனதில் சுதந்திர உணர்வை வளர்க்கும் என பதிவிட்டுள்ளார்.
மணிகர்ணிகா படத்தில் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்ஷ்மி பாயாக கங்கனா ரனாவத் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நெருங்குகிறது சுதந்திர தினம்
அடுத்த மாதம் இந்திய சுதந்திர தினம் வருவதை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள், திரைப்படங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை வரலாற்று டாக்குமென்ட்ரிகள் உள்ளிட்டவை சமூக வலைதளங்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. கொரோனாவில் இருந்து வரும் சுதந்திர தினத்தில் ஆவது இந்தியா மீளுமா என்பதே பலரது கனவாகவும் இருக்கின்றன.

எப்படி கொடி ஏற்றப்படும்
ராணுவ வீரர்கள், பல துறை வல்லுநர்கள், மாணவ மணிகள் என பலர் சேர்ந்து அணிவகுத்து நின்று ஏற்றப்படும் சுதந்திர கொடி, இந்த 74வது சுதந்திர தினத்தில் சாத்தியப்படுமா? என்ற கேள்வி பூதாகரமாக எழுந்து நிற்கிறது. கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளி பேண வேண்டிய நிலையிலும், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கும் நேரத்திலும், சுதந்திர தின கொண்டாட்டம் களை இழந்து காணப்படுமா என்ற அச்சமும் மக்கள் மத்தியில் எழுந்து நிற்கிறது.

மணிகர்ணிகா பொம்மை
இந்நிலையில், சுதந்திர போரட்ட வீராங்கனையான ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தை இயக்கி நடித்த பிரபல பாலிவுட் ஹீரோயின் கங்கனா ரனாவத்தின் ‘மணிகர்ணிகா' பொம்மை சந்தைகளில் விற்பனைக்கு வந்து இருக்கிறது. சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில், இதன் விற்பனை சூடு பிடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திர தாகம்
தற்போது கடைகளில் விற்பனைக்கு வந்திருக்கும் மணிகர்ணிகா பொம்மைகள், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வருங்கால தலைமுறையினர், நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கதைகளை அறிந்து கொண்டு, சுதந்திர தாகத்துடனும், வீரத்துடனும் தைரியமாக வளர வேண்டியது அவசியம் என கங்கனா ட்வீட் செய்திருக்கிறார்.

ஜெயலலிதா பயோபிக்
ஜான்சி ராணியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தைத் தொடர்ந்து, அடுத்ததாக இயக்குநர் விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பயோபிக்கிலும் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். தலைவி எனும் டைட்டிலில் உருவாகி வரும் அந்த படம் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லாக்டவுன் காரணமாக அந்த படத்தின் ரிலீசும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











