கஜினி படத்தில் நடித்தது மோசம்.. ஓபனாக பேசிய நயன்தாரா.. அப்படி என்ன நடந்துபோச்சு
சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இதுவரை 75 படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் மலையாள படம் ஒன்றிலும் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக சினிமாவில் கோலோச்சியிருக்கும் அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கஜினி திரைப்படம் குறித்து நயன்தாரா பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
நயன்தாராவின் வளர்ச்சி தமிழ் சினிமாவில் ஆழமாக பதிக்கப்பட்டுவிட்டது. ஐயா படத்தில் அறிமுகமான அவர் படிப்படியாக முன்னேறினார். ரஜினியுடன் ஜோடி சேர்ந்து சந்திரமுகி படத்தில் நயன் நடித்திருந்தாலும்; அந்தப் படத்தில் ஸ்கோர் செய்தது என்னவோ ஜோதிகாதான். இருந்தாலும் நயன்தாராவின் அழகு வெகுவாக கோலிவுட்டை ஈர்த்தது. முக்கியமான தேவையான இடங்களில் கவர்ச்சியை காண்பிக்கவும் அவர் தயங்கியதே இல்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து அமைந்தன.

கஜினி: அப்படி அமைந்த படம்தான் கஜினி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் லீடு ரோல்களில் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்பதை வைத்துக்கொண்டு முருகதாஸ் திரைக்கதை அமைத்திருந்தார். அந்தப் படத்தில் நயன்தாராவுக்கு இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரமே கிடைத்தது. இருந்தாலும் அதிலும் தனது திறமையை காண்பித்தார் நயன். ஒரு பாடலில் கவர்ச்சி நடனமும் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கேரவன் வசதி இல்லாததால் அந்தப் படத்துக்காக கார் டிக்கிக்கு பின் நின்று அவர் உடை மாற்றிய கதை எல்லாம் உண்டு.
அசுர வளர்ச்சி: இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரம் கிடைத்தால் தொடர்ந்து அதேபோன்றுதான் வரும் என்பதையெல்லாம் யோசிக்காமல் நடித்து முடித்த நயன்தாரா; அதற்கு அடுத்து தொடர்ந்து ஹீரோயினாக நடித்தார். அதன்படி விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்து சினிமாவிலிருந்து விலகினார். பிறகு ரீ எண்ட்ரி கொடுத்து லேடி சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கிறார்.
காதல் டூ கல்யாணம்: மேலும் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்து சில வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றிருக்கிறார். இப்போது ஒருபக்கம் குடும்பம், இன்னொருபக்கம் நடிப்பு என படுபிஸியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக மலையாள படத்தில் நடிக்கிறார். மேலும் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
நயன் பேட்டி: இந்நிலையில் கஜினி படத்தில் நடித்தது குறித்து நயன்தாரா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அவர் அளித்த பேட்டியில், "கஜினி படத்தில் நடித்ததுதான் எனது வாழ்க்கையில் எடுத்த மோசமான முடிவு. அந்தப் படத்தில் எனது கதாபாத்திரம் என்னிடம் சொல்லப்பட்டபடி காட்டப்படவில்லை. சில இடங்களில் நான் மோசமாக சித்தரிக்கப்பட்டேன். இதுபற்றி நான் புகார் எல்லாம் சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் இதனை நான் எனது வாழ்க்கையில் ஒரு அனுபவமாக எடுத்துக்கொள்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











