Nayanthara - எங்களை காக்க வந்த தெய்வம்.. ட்ரெண்டாகும் நயன்தாராவின் இன்ஸ்டா போஸ்ட்.. ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது வீட்டுக்கு மதுரை வீரன் சிலை ஒன்றை அவர் வாங்கி வைத்திருக்கிறார்.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர் சிம்புவை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்த அவருக்கு அந்தக் காதலும் கைகூடவில்லை. பிரபுதேவாவை காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக கூறி கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸ்: பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவருக்கு ராஜா ராணி, நானும் ரௌடிதான், அறம் என தான் நடிப்பதற்கு ஸ்பேஸ் உள்ள படங்கள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் இரண்டாவது இன்னிங்ஸில் வேறு மாதிரியான நயன்தாராவாக கலக்க தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் வழங்கினார்கள்.
காதல்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினார்கள். முதலில் அரசல் புரசலாக அந்தச் செய்தி வெளிவர தொடங்கியது. மேலும் அதில் உண்மை இருக்காது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் விருதுகள் வழங்கும் விழா உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு விக்னேஷ் சிவனும், நயனும் ஒன்றாக கலந்துகொள்ள ஆரம்பித்ததை அடுத்து அவர்களது காதல் உறுதியானது.
திருமணம்: இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு பேரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு நயன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் அவர் ஜவான், இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் கடைசியாக நடித்திருந்தார். இவற்றில் ஜவான் படம் மட்டும் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
இன்ஸ்டா போஸ்ட்: தனது பட ப்ரோமோஷனில் கலந்துகொள்ளாதவர் நயன் தாரா. ஆனால் ஷாருக்கானுடன் நடித்த ஜவான் படத்துக்காக இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினார். அதனையடுத்து தனது குடும்பம் தொடர்பான வீடியோ, படம் தொடர்பான வீடியோ உள்ளிட்டவற்றை அதில் பகிர்ந்துவருகிறார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதாவது தனது வீட்டுக்கு மதுரை வீரன் சிலையை வாங்கி வைத்திருக்கும் புகைப்படம்தான் அது. அந்தப் புகைப்படத்துடன் எங்களை காக்க வந்த தெய்வம் என்று கேப்ஷனும் போட்டிருக்கிறார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், கிறிஸ்தவராக இருந்தாலும் மதுரை வீரனையும் கும்பிடுகிறாரே நயன் என்று மகிழ்ச்சி தெரிவித்து அதனை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











