Nayanthara - தாதா சாகேப் பால்கே விருது.. மேடையில் தமிழில் பேசி அசத்திய நயன்தாரா
சென்னை: நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்தார். 75ஆவது படமாக அமைந்த அன்னபூரணி அவருக்கு தோல்வியையே கொடுத்தது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மேலும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஜவானில் நடித்ததற்காக அவருக்கு சமீபத்தில்தான் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. ஐயா படத்தின் மூலம் அறிமுகமாகி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த அவர் சிம்புவை காதலித்தார். ஆனால் அவர்களது காதல் பாதியில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை காதலித்த அவருக்கு அந்தக் காதலும் கைகூடவில்லை. பிரபுதேவாவை காதலித்துக்கொண்டிருந்தபோதுதான் சினிமாவிலிருந்து ஒதுங்குவதாக கூறி கிறிஸ்தவ மதத்திலிருந்து ஹிந்து மதத்துக்கும் மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது இன்னிங்ஸ்: பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்த அவருக்கு ராஜா ராணி, நானும் ரௌடிதான், அறம் என தான் நடிப்பதற்கு ஸ்பேஸ் உள்ள படங்கள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் இரண்டாவது இன்னிங்ஸில் வேறு மாதிரியான நயன்தாராவாக கலக்க தொடங்கினார். அந்த சமயத்தில்தான் அவருக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் ரசிகர்கள் வழங்கினார்கள்.
காதல்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அந்தப் படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினார்கள். முதலில் அரசல் புரசலாக அந்தச் செய்தி வெளிவர தொடங்கியது. மேலும் அதில் உண்மை இருக்காது என்றே பலரும் கருதினார்கள். ஆனால் விருதுகள் வழங்கும் விழா உள்ளிட்ட சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களுக்கு விக்னேஷ் சிவனும், நயனும் ஒன்றாக கலந்துகொள்ள ஆரம்பித்ததை அடுத்து அவர்களது காதல் உறுதியானது.
திருமணம்: இதனையடுத்து கடந்த 2022ஆம் ஆண்டு இரண்டு பேரும் மகாபலிபுரத்தில் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். திருமணத்துக்கு பிறகு நயன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் அவர் ஜவான், இறைவன், அன்னபூரணி உள்ளிட்ட படங்களில் கடைசியாக நடித்திருந்தார். இவற்றில் ஜவான் படம் மட்டும் வட மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மண்ணாங்கட்டி என்ற படத்தில் கமிட்டாகியிருக்கிறார்.
தாதா சாகேப் பால்கே விருது: ஹிந்தியில் அறிமுகமான முதல் படத்திலேயே பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறார் நயன். அடுத்ததாக ரன்வீர் சிங்குடன் ஒரு படத்தில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சூழல் இப்படி இருக்க அவருக்கு சமீபத்தில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. முதல் படத்திலேயே திரைத்துறையின் உச்ச விருதுகளில் ஒன்றை பெற்ற நயனுக்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்தனர்.
தமிழில் பேசிய நயன்: இந்நிலையில் விருது பெற்ற வீடியோவை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். விருதை ஷாருக்கானிடமிருந்து பெற்றுக்கொண்ட அவர் முதலில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் பேசினார். பிறகு தமிழில் பேசிய அவர், “என்றைக்கும் என்னுடன் இருக்கும் உறவுக்கும், உலகுக்கும், உயிருக்கும் என்னுடைய எல்லாமுமான விக்கிக்கும் ஆயிரம் கோடி லவ் யூக்கள். கலைக்கும், காதலுக்கும், அன்புக்கும், ஆண்டவனுக்கும் நன்றி” என்றார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











