நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு தூதுவராக செயல்படவில்லை - நயன்தாரா, த்ரிஷா மறுப்பு
சென்னை: நட்சத்திர கிரிக்கெட் எனப்படும் சிசிஎல்லின் சென்னை ரைனோஸ் அணிக்கு விளம்பரத் தூதராக செயல்படவில்லை என்று நடிகைகள் நயன்தாராவும் த்ரிஷாவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி நடிகர்கள் பங்கேற்கும் 'சிசிஎல்' நட்சத்திர கிரிக்கெட் போட்டி அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நடக்கிறது.

இதில் தமிழ் நடிகர்களின் சென்னை ரைனேஸ் அணிக்கு நடிகைகள் நயன்தாரா, திரிஷா ஆகியோர் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.
திரிஷா ஏற்கனவே இந்த அணியில் தூதுவராக இருந்துள்ளார். நயன்தாராவை தூதுவராக நியமித்து பிறகு நீக்கி விட்டனர்.
இப்போது மீண்டும் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர்களிடம் கேட்டபோது மறுப்பு தெரிவித்தனர்.
நயன்தாரா கூறுகையில், "சிசிஎல் கிரிக்கெட் அணிக்கு தூதுவராக இருக்கும்படி கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. அதற்கு என்னிடம் நேரமும் இல்லை. தற்போது எனது முழு கவனமும் நான் நடித்துக் கொண்டிருக்கும் படங்களில்தான்," என்றார்.
த்ரிஷா கூறும்போது," ஏற்கெனவே நான் தூதுவராக இருந்திருக்கிறேன். ஆனால் இந்த முறை யாரும் என்னை அழைக்கவில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











